'பும்ராவுக்கு ஏற்பட்ட நிலைதான் கேஎல் ராகுலுக்கும் ஏற்படும்' : ரவி சாஸ்திரி எச்சரிக்கை
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு சரியாக இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், இதில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிபுணர்களாக பணியாற்றும் முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் முன்னாள் தேர்வாளர்களான சந்தீப் பாட்டீல் மற்றும் எம்எஸ்கே பிரசாத் ஆகியோர் ஆசிய கோப்பை போட்டிக்கான தங்களின் சிறந்த 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்தனர். கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத நிலையில், ஜஸ்ப்ரீத் பும்ரா அயர்லாந்து தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெறும் முன், பும்ராவுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும் என்பதால், அவரை ஆசிய கோப்பைக்கான தங்கள் அணியில் தேர்வு செய்துள்ளனர்.
கேஎல் ராகுல் குறித்து மாறுபட்ட கருத்து
தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள கேஎல் ராகுல் முழு உடற்தகுதியுடன் இருப்பதை கடந்த ஒரு வாரமாக நேரில் பார்த்ததாக எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். எனினும் சந்தீப் பாட்டில் இதை நிராகரித்து நெட்டில் விளையாடுவதும், களத்தில் விளையாடுவதும் ஒன்றாகாது என தெரிவித்துள்ளார். இதை வழிமொழிந்துள்ள ரவி சாஸ்திரி, முழு உடற்தகுதியை பெறும் முன் சேர்த்தால், பும்ராவுக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என எச்சரித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிபுணர்களின் இந்திய அணி: இஷான் கிஷன், ஷுப்மான் கில், விராட் கோலி, ரோஹித் ஷர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்ப்ரீத் பும்ரா.