Nz vs Ned: 99 ரன்கள் வித்தியாசத்தில் இலகுவாக நெதர்லாந்தை வீழ்த்திய நியூசிலாந்து
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் சார்பாக டெவன் கான்வே மற்றும் வில் யங் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். நியூசிலாந்து பேட்டர்களுக்கு நெதர்லாந்து எந்தவித அழுத்தத்தையும் ஏற்படுத்தவில்லை. சீரிய இடைவெளியில் நெதர்லாந்து அணி விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தாலும், அது நியூசிலாந்து அணியின் ஸ்கோர் கார்டில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வில் யங், ரச்சின் ரவீந்திரா மற்றும் டாம் லதாம் ஆகியோரின் அரை சதங்களுடன் 50 ஓவர்கள் முடிவில் 322 ரன்களைக் குவித்திருந்தது நியூசிலாந்து.
நியூசிலாந்தின் சிறப்பான ஆட்டம்:
அரைசதங்களைக் கடந்த மேற்கூறிய பேட்டர்களைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணியின் பிற பேட்டர்களும் அணியின் ரன்குவிப்பில் சிறந்த அளவில் பங்காற்றியிருந்தனர். நெதர்லாந்து அணி சார்பில் ஆர்யன் டட், பால் வேன் மேக்கரீன் மற்றும் ரோல்ஃப் வேன் டர் மெர்வீ ஆகிய வீரர்கள் அதிகபட்சமாக தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர். மொத்தமாக நியூசிலாந்து அணியின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது நெதர்லாந்து. முதல் இன்னிங்ஸ் முடிவில் நெதர்லாந்து அணிக்கு 323 ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. இரண்டவதாக பேட்டிங் செய்ய களமிறங்கிய நெதர்லாந்து அணியின் சார்பாக விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓ டவுட் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர்.
ரன்குவிப்பில் தோல்வியடைந்த நெதர்லாந்து அணி:
நெதர்லாந்து அணி பேட்டர்கள் அனைவருமே சற்று நிலைத்து நின்று ஆடிய போதிலும், தேவையான ரன்களைக் குவிக்கத் தவறிவிட்டனர். மேலும், அந்த அணியின் மூன்றாவது வீரராகக் களமிங்கிய காலின் ஆக்கர்மன் தவிர மற்ற அனைத்து பேட்டர்களுமே 30-க்கும் குறைவான ரன்களை மட்டுமே குவித்து ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக சுழற்பந்து வீச்சாளர் மிட்சல் சாண்ட்னர் ஐந்து விக்கெட்டுகளையும், வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர். நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சால் 46.3 ஓவர்களில் 223 ரன்களை மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது நெதர்லாந்து. 99 ரன்கள் வித்தியாசத்தில் மற்றொரு மாபெரும் வெற்றியைப் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது நியூசிலாந்து.