இந்தியன் வெல்ஸை தொடர்ந்து மியாமி ஓபனிலும் இருந்து நோவக் ஜோகோவிச் விலகல்
தடுப்பூசி போடாத உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் தடுப்பூசி போடாததால், அமெரிக்காவில் நடக்க உள்ள மியாமி ஓபன் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். செர்பியாவைச் சேர்ந்த 35 வயதான ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போடாததற்கு விதிவிலக்கு பெற முடியாததால் ஏற்கனவே இந்தியன் வெல்ஸிலும் பங்கேற்றவில்லை. அமெரிக்க அரசிடமிருந்து ஜோகோவிச்சிற்கு விலக்கு பெற முயற்சி செய்த நிலையில், அது முடியாமல் போனதால், அவரை விலக்கியுள்ளதாக மியாமி ஓபன் போட்டியின் இயக்குனர் ஜேம்ஸ் பிளேக் தெரிவித்தார். ஜேம்ஸ் பிளேக் மேலும், "மியாமி ஓபன் உலகின் முதன்மையான போட்டிகளில் ஒன்றாக உள்ளது. டென்னிஸின் சிறந்த வீரர்கள் இங்கு விளையாடப்படுவதை நாங்கள் விரும்புகிறோம். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். ஆனால் இறுதியில் அது நடக்கவில்லை." எனக் கூறினார்.
மே 11 முதல் தடுப்பூசி கட்டுப்பாடுகளை நீக்கும் அமெரிக்கா
அமெரிக்கா தற்போது தடுப்பூசி போடப்படாதவர்களை நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளது. எனினும் மே 11 அன்று அமெரிக்க அரசாங்கம் தனது கொரோனா அவசரகால அறிவிப்பை முடிக்கும் போது இந்த கட்டுப்பாடு நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோகோவிச் முன்னதாக 2022 ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதற்காக 10 நாள் சட்டப் போராட்டத்தை நடத்திய நிலையில், ஆஸ்திரேலியா அவரை அனுமதிக்காமல் நாடு கடத்தியது. ஒரு வருடம் கழித்து, 2023இல் பங்கேற்று பட்டத்தை வென்றார். மேலும் 2022 யுஎஸ் ஓபனையும் தவறவிட்ட ஜோகோவிச், கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை விட கிராண்ட்ஸ்லாம் போட்டிகளைத் தவிர்ப்பேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.