விம்பிள்டன் வரலாற்றில் முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறிய இகா ஸ்வியாடெக்
போலந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்வியாடெக், தனது முதல் விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் விளையாட உள்ளார். தற்போது நடந்து வரும் விம்பிள்டன் 2023 தொடரில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 9) நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஸ்விஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக்கை 6-7 (4-7), 7-6 (7-2), 6-3 என்ற செட் கணக்கில் இகா ஸ்வியாடெக் போராடி வீழ்த்தினார். இதன் மூலம் விம்பிள்டன் வரலாற்றில் முதல் முறையாக காலிறுதியை எட்டியுள்ள ஸ்வியாடெக், காலிறுதியில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை எதிர்கொள்கிறார். முன்னதாக எலினா ஸ்விடோலினா காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான விக்டோரியா அசரென்காவை தோற்கடித்து வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.
நோவக் ஜோகோவிச் ஆட்டம் மழையால் ஒத்திவைப்பு
ஆடவர் ஒற்றையர் பிரிவு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், செர்பியாவை சேர்ந்த உலகின் முன்னணி வீரரானாக நோவக் ஜோகோவிச், ஞாயிற்றுக்கிழமை போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸை எதிர்கொண்டார். முந்தைய போட்டி முடிய மூன்று மணி நேரம் ஆகிவிட்டதால், இரவு 8.50 மணிக்கு பிறகு தான் போட்டி தொடங்கியது. எனினும், முதல் இரண்டு செட் ஆட்டங்கள் முடிந்திருந்த நிலையில், இரவு 10.35 மணிக்கு போட்டி இடைநிறுத்தப்பட்டது. உள்ளூர் விதிகள் விம்பிள்டன் போட்டிகள் இரவு 11 மணிக்கு மேல் நீடிப்பதைத் தடுக்கின்றன. எனவே அந்த நேரத்தை நெருங்கும் போட்டிகள் ஒரு செட் முடிந்ததும் நிறுத்தப்படும். இதையடுத்து திங்களன்று (ஜூலை 10) அடுத்த சுற்று ஆட்டத்துடன் மீண்டும் போட்டி தொடங்க உள்ளது.