
ஒரே சீசனில் அனைத்து கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் காலிறுதிக்குத் தகுதி பெற்ற வயதான வீரர்; நோவக் ஜோகோவிச் புதிய சாதனை
செய்தி முன்னோட்டம்
செர்பிய டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச், தனது 38 வது வயதிலும் டென்னிஸ் உலகின் சாதனைகளைத் தொடர்ந்து முறியடித்து வருகிறார். யுஎஸ் ஓபன் 2025 போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம், அவர் ஒரே சீசனில் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் காலிறுதிக்குத் தகுதி பெற்ற வயதான வீரர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 16 வது சுற்றுப் போட்டியில் ஜெர்மனியின் ஜான்-லெனார்ட் ஸ்ட்ரஃப்பை 6-3, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் தோற்கடித்து, ஜோகோவிச் காலிறுதிக்குத் தகுதி பெற்றார். இது அவரது 64 வது கிராண்ட் ஸ்லாம் காலிறுதிச் சுற்று ஆகும்.
ஒன்பதாவது முறை
ஒன்பதாவது முறையாக காலிறுதி
இந்த வெற்றியின் மூலம், ஒரே ஆண்டில் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் காலிறுதிக்குத் தகுதி பெற்ற சாதனையை ஒன்பதாவது முறையாக எட்டியுள்ளார். இதற்கு முன், டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் இந்தச் சாதனையை எட்டு முறை நிகழ்த்தியுள்ளார். யுஎஸ் ஓபன் கோப்பையை வெல்வதற்கான ஜோகோவிச்சின் பயணம் இனி கடினமாக இருக்கும். அடுத்ததாக, அவர் காலிறுதிச் சுற்றில் உலகின் நான்காவது தரவரிசை வீரரான டெய்லர் ஃபிரிட்ஸை எதிர்கொள்ள உள்ளார். ஸ்ட்ரஃப்புக்கு எதிரான வெற்றிக்குப் பிறகுப் பேசிய ஜோகோவிச், ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். தனது டென்னிஸ் வாழ்க்கையில் இன்னும் எத்தனை போட்டிகள் எஞ்சியுள்ளன என்பது தெரியாது என்றும், ஒவ்வொரு போட்டியையும் முழுமையாக அனுபவித்து விளையாட விரும்புவதாகவும் அவர் கூறினார்.