விம்பிள்டன் 2023: பயிற்சி அமர்வை வேவு பார்த்த கார்லோஸ் அல்கராஸின் தந்தை! வெறுப்படைந்த நோவக் ஜோகோவிச்!
விம்பிள்டன் 2023 தொடரின் காலிறுதி போட்டிகள் நடந்து வரும் நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச்சின் ஆதிக்கம் தொடர்கிறது. கடந்த நான்கு முறை தொடர்ச்சியாக விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றியுள்ள நோவக் ஜோகோவிச், இந்த முறையும் பட்டத்தை தக்கவைக்கும் நம்பிக்கையுடன் உள்ளார். மேலும், இந்த முறை பட்டம் வென்றால், விம்பிள்டனில், இது அவருக்கு எட்டாவது பட்டமாக அமையும். ஒருபுறம் ஜோகோவிச் நம்பிக்கையுடன் இருந்தாலும், உலக தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள கார்லோஸ் அல்கராஸ் மட்டுமே ஜோகோவிச்சை முறியடிக்கும் திறன் கொண்டவராக பார்க்கப்படுகிறது. விம்பிள்டனில் முதல் முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள இளம் வீரரான கார்லோஸ், புதன்கிழமை (ஜூலை 12) காலிறுதிப்போட்டியில் விளையாட உள்ளார்.
நோவக் ஜோகோவிச்சின் பயிற்சியை நோட்டம் விட்ட கார்லோஸ் அல்கராஸின் தந்தை
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் அல்கராஸ், இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சிற்கு எதிராக விளையாட விரும்புவதாக பலமுறை தெரிவித்துள்ளார். அவர் இதற்கு முன்பும் கூட ஜோகோவிச்சை வீழ்த்தி இருந்தாலும், விம்பிள்டனில் அவரை கையாள்வது கடினம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கார்லோஸின் தந்தை, ஜோகோவிச்சின் பயிற்சி அமர்வின் போது நெருக்கமாகப் பின்தொடர்ந்து, அந்த அமர்வை பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வெறுப்படைந்த ஜோகோவிச், பயிற்சி அமர்வுகளின் போது தனியுரிமையை பாதுகாக்குமாறு, போட்டி அமைப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பயிற்சி அமர்வின்போது சில விஷயங்களை முயற்சிக்கவும், தனது குழுவுடன் தெளிவாக தொடர்பு கொள்ளவும், தனியுரிமை அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.