டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன்; 400 கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளுடன் வரலாறு படைத்தார் நோவக் ஜோகோவிச்
செய்தி முன்னோட்டம்
டென்னிஸ் உலகின் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச், 2026 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். ஜனவரி 24 அன்று நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்தின் போதிக் வான் டி ஜாண்ட்ஸ்சுல்ப்பை வீழ்த்தியதன் மூலம், கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் 400 வெற்றிகளைப் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் நோவக் ஜோகோவிச் டென்னிஸ் உலகின் மிகச்சிறந்த வீரர்களின் பட்டியலில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளார்.
டாப் 5 வீரர்கள்
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்ற முதல் ஐந்து வீரர்களின் விவரம்
400 வெற்றிகளுடன் நோவக் ஜோகோவிச் முதலிடத்த்தில் உள்ள நிலையில், ரோஜர் ஃபெடரர் 369 வெற்றிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ரஃபேல் நடால் 314 வெற்றிகளுடனும், ஜிம்மி கானர்ஸ் 233 வெற்றிகளுடனும் ஆண்ட்ரே அகாசி 224 வெற்றிகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 38 வயதான ஜோகோவிச், தனது அனுபவ ஆட்டத்தால் இளம் வீரர்களுக்குச் சவால் விடுத்து வருகிறார். முதல் இரண்டு செட்களை 6-3, 6-4 என எளிதாகக் கைப்பற்றிய அவர், மூன்றாவது செட்டில் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் சுற்று 16க்கு முன்னேறியுள்ளார். 24 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஜோகோவிச், தற்போது தனது 10வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார்.
பெண்கள்
பெண்கள் பிரிவில் இகா ஸ்வியாடெக் போராடி வெற்றி
பெண்கள் ஒற்றையர் பிரிவில், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக், அன்னா கலின்ஸ்காயாவை 6-1, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார். இரண்டாவது செட்டில் பின்னடைவைச் சந்தித்தாலும், தீர்க்கமான ஆட்டத்தின் மூலம் மூன்றாவது செட்டில் மீண்டு வந்து வெற்றியை உறுதி செய்தார்.