வாய்ப்பே இல்லை! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மிரட்டல் குறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கருத்து!
2023 ஆசிய கோப்பை சர்ச்சை தீவிரமாக சுழன்று கொண்டிருக்கும் நிலையில், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் என பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர். சமீபத்திய ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) கூட்டத்தில், போட்டி நடைபெறும் இடம் குறித்த முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் இது குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். அஸ்வின், தனது யூடியூப் சேனலில் பேசுகையில், ஆசிய கோப்பைக்காக பிசிசிஐ அவர்கள் நாட்டுக்கு வர மறுத்தால், இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிப்பது சாத்தியமில்லை என்றார். மேலும் எமிரேட்ஸில் ஏற்கனவே பல போட்டிகள் நடத்தப்பட்டுவிட்டதால், ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படவே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை இடமாற்ற சர்ச்சை
தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட பல காரணங்களால், 2006 ஆம் ஆண்டு பிறகு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடியதில்லை. இந்நிலையில், 2023 ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் நடத்த உள்ள நிலையில், போட்டியை வேறு இடத்திற்கு மாற்றாவிட்டால், இந்தியா விளையாடாது என பிசிசிஐ அறிவித்துவிட்டது. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு வந்ததோடு, இந்தியா வராவிட்டால், ஒருநாள் உலகக்கோப்பையை ஆட தாங்கள் இந்தியா வரமாட்டோம் என கூற, மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏசிசி தலைவராக தற்போது ஜெய் ஷா உள்ள நிலையில், போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற தீவிரம் காட்டி வருவதாகவும், மார்ச் மாதம் நடக்க உள்ள ஏசிசி கூட்டத்தில் இதற்கான முடிவு இறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.