முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் சிஎஸ்கே ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
ஐபிஎல் 2023 இன் தொடக்க ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினாலும், அடுத்த இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்ற எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 17வது போட்டியில் புதன்கிழமை (ஏப்ரல் 12) எதிர்கொள்கிறது. எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸை தோற்கடித்த சிஎஸ்கே ஹாட்ரிக் வெற்றிகளை நிறைவு செய்து ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியலில் நம்பர் 1 இடத்தைப் பிடிக்க விரும்புகிறது. ஆனால் அது அத்தனை எளிதானது அல்ல. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயீன் அலி இதிலும் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.
தீபக் சாஹர் பங்கேற்பதிலும் சிக்கல்
கடந்த டிசம்பரில் நடந்த மினி ஏலத்தில் ரூ.16.25 கோடிக்கு பென் ஸ்டோக்ஸை மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியிருந்த நிலையில், இது மிகப்பெரிய பின்னடைவாகும் . மேலும் மொயீன் அலியும் விளையாடாத சூழலில் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கும் கடந்த ஆட்டத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அடுத்த நான்கு முதல் ஐந்து போட்டிகளில் பங்கேற்க முடியாது எனக் கூறப்படும் நிலையில், பந்துவீச்சில் முழுக்க முழுக்க அனுபவமில்லாத வீரர்களை வைத்து விளையாட வேண்டியிருக்கும். சிஎஸ்கே விளையாடும் லெவன் : டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி, ஷிவம் துபே, டுவைன் பிரிட்டோரியஸ், ராஜ்வர்தன் ஹங்கர்கேகா, மட்செல் துஷானா, மிட்செல் சான்ட்னர் .