தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இணைந்தார் ரிஷப் பந்த்! விரைவில் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு!
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்காக இணைந்துள்ளார். முன்னதாக, கடந்த டிசம்பர் இறுதியில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ரிஷப் பந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் வீட்டிற்கு திரும்பி விட்டாலும், நீண்ட காலம் ஓய்வு தேவை எனக் கூறப்பட்டதால் ஐபிஎல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிகளில் இருந்து விலகினார். இந்நிலையில் அவருக்கு மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்படும் என கூறப்பட்ட நிலையில், அவர் முழுமையாக காயத்திலிருந்து மீண்டுள்ளதால் அறுவை சிகிச்சை தேவையில்லை என முடிவு செய்யப்பட்டதை அடுத்து பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு சென்றுள்ளார்.
ரிஷப் பந்தின் உடற்தகுதி குறித்து பிசிசிஐ கூறுவது என்ன?
ரிஷப் பந்தின் உடற்தகுதி குறித்து பேசிய பிசிசிஐ அதிகாரிகள், "ஊடகங்களில் விவாதிக்கப்பட்டதை போல பந்துக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்படவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். அவருக்கு மற்றொரு அறுவை சிகிச்சை தேவைப்படும் என கருதப்பட்டது. அவரது உடல்நிலையை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக, அவரது உடல்நிலை முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது. அவரது மறுபிரவேசம் முதலில் எதிர்பார்த்ததை விட மிகவும் முன்னதாகவே நடக்கும் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்." என்று தெரிவித்துள்ளனர். அவர் தற்போதைக்கு ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்றாலும், அவரது உடற்தகுதியை பொறுத்து அப்போதைக்கு இது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.