அமெரிக்காவிலும் கொடி நாட்டிய மும்பை இந்தியன்ஸ்; மேஜர் லீக் கிரிக்கெட்டின் முதல் பட்டத்தை வென்று அசத்தல்
நிக்கோலஸ் பூரனின் அதிரடி சதத்தால் எம்ஐ நியூயார்க் (மும்பை இந்தியன்ஸ்), சியாட்டில் ஓர்காஸை வீழ்த்தி மேஜர் லீக் கிரிக்கெட்டின் முதல் சீசனில் பட்டத்தை வென்றது. இந்திய நேரப்படி திங்கட்கிழமை (ஜூலை 31) காலை 6 மணிக்கு டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியத்தில் தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்ற எம்ஐ நியூயார்க் முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சியாட்டில் ஓர்காஸ், தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக்கின் 87 ரன்கள் மூலம், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. எம்ஐ அணியில் போல்ட் மற்றும் ரஷீத் கான் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
நிக்கோலஸ் பூரனின் சதத்தால் எம்ஐ நியூயார்க் வெற்றி
184 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய எம்ஐ நியூயார்க் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், கேப்டன் நிக்கோலஸ் பூரன் 55 பந்துகளில் 137 ரன்கள் குவித்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம், மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் பட்டத்தை எம்ஐ நியூயார்க் கைப்பற்றியது. இதற்கிடையே, தொடரின் முதல் சீசனில் நிக்கோலஸ் பூரன் எட்டு ஆட்டங்களில் 167.24 ஸ்ட்ரைக் ரேட்டில் 388 ரன்களுடன் தொடரின் அதிக ரன் எடுத்தவராக உள்ளார். எம்ஐ அணியின் ட்ரெண்ட் போல்ட் 22 விக்கெட்டுகளுடன் தொடரின் அதிக விக்கெட் எடுத்தவராக உள்ளார். எனினும் இந்த தொடருக்கு ஐசிசி டி20 அந்தஸ்து வழங்காததால், வீரர்களின் சாதனைகள் அவர்களது அதிகாரப்பூர்வ பதிவில் சேர்க்கப்படாது.