வங்கதேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 31) நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒயிட் வாஷ் ஆவதை தவிர்த்தது. பே ஓவல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச கிரிக்கெட் அணி 19.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேச அணியில் ஒரு வீரர் கூட 20 ரன்களை தாண்டாத நிலையில், கேப்டன் நஜ்முல் ஹுசைன் சாண்டோ அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய மிட்செல் சான்ட்னர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மழையால் நின்றது ஆட்டம்
111 ரன்கள் எனும் எளிய இலக்குடன் நியூசிலாந்து கிரிக்கெட் அணி களமிறங்கி விளையாடிய நிலையில், இடையில் மழை குறுக்கிட்டது. 14.4 ஓவர்களில் நியூசிலாந்து அணி 95 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆடிக்கொண்டிருந்தபோது தொடங்கிய மழை அதன் பிறகு நிற்காமல் வெளுத்து வாங்கியது. இதனால் போட்டி ரத்து செய்யப்பட்டு, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 17 ரன்கள் முன்னிலையில் இருந்த நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவி தொடரை இழந்தாலும், கடைசி போட்டியில் வெற்றி பெற்று உள்நாட்டில் ஒயிட் வாஷ் ஆவதைத் தவிர்த்துள்ளது.