வங்கதேசம் vs நியூசிலாந்து 2வது டெஸ்ட் : 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி
டாக்காவில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் செய்ய முடிவெடுத்து முதல் விக்கெட்டுக்கு 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முஷ்பிகுர் ரஹீம் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்த நிலையில், நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் மிட்செல் சான்ட்னர் மற்றும் கிளென் பிலிப்ஸ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கிளென் பிலிப்ஸ் 87 ரன்கள் எடுத்தார். மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் தைஜூல் இஸ்லாம் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அஜாஸ் படேல் சுழலில் சுருண்ட வங்கதேசம்
8 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச கிரிக்கெட் அணி 144 ரன்களுக்கு சுருண்டது. அபாரமாக பந்துவீசிய நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜாகிர் ஹசன் அதிகபட்சமாக 59 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இலக்கை எட்டியது. கிளென் பிலிப்ஸ் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 1-1 என சமன் செய்துள்ளது. முன்னதாக, முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.