
கிரிக்கெட்டில் டெஸ்ட் ட்வென்டி அறிமுகம்: இளைஞர்களை இலக்காகக் கொண்ட புதிய வடிவம் உருவாக்கம்
செய்தி முன்னோட்டம்
கிரிக்கெட் விளையாட்டை உலகமயமாக்கும் நோக்கத்துடன், குறிப்பாக இளம் திறமையாளர்களை ஈடுபடுத்தும் வகையில், கிரிக்கெட்டில் நான்காவது வடிவிலான டெஸ்ட் ட்வென்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேத்யூ ஹைடன், ஹர்பஜன் சிங், சர் கிளைவ் லாய்ட் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்கள் முன்னிலையில் இந்தப் புதிய சாம்பியன்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 13 முதல் 19 வயது வரையிலான இளைஞர்களை இலக்காகக் கொண்டுள்ளது. முதல் இரண்டு பதிப்புகளும் இந்தியாவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், முதல் பதிப்பு ஜனவரி 2026 இல் தொடங்கவுள்ளது. படிப்படியாக இது சர்வதேச சுற்றுப் போட்டியாக மாற உள்ளது.
ஈர்ப்பு
கிரிக்கெட் அறிமுகம் இல்லாத நாடுகளை ஈர்க்கும் நோக்கம்
இந்தியா போன்ற பாரம்பரிய கிரிக்கெட் நாடுகளில் மட்டும் இன்றி, கிரிக்கெட் அறிமுகம் இல்லாத பிற நாடுகளிலும் உள்ள இளைஞர்களை இந்த விளையாட்டின்பால் ஈர்ப்பதே நோக்கம் என்று ஏற்பாட்டாளர் கௌரவ் பஹிர்வானி விளக்கினார். 13 முதல் 19 வயது வரையிலானவர்களுக்கு அடையாள அட்டையைக் காண்பித்தால் மைதானத்திற்குள் நுழைய கட்டணம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் ட்வென்டி வடிவமானது பாரம்பரிய டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டின் கலவையாகும். மொத்தமாக 80 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டியில், ஒரு அணிக்கு 20 ஓவர்கள் வீதம் இரண்டு இன்னிங்ஸ்கள் இடம்பெறும். டெஸ்ட் போட்டிகளைப் போலவே, ஒவ்வொரு அணியும் இரண்டு முறை பேட்டிங் செய்யும். இதன் முடிவுகள் வெற்றி, தோல்வி, சமன் அல்லது டிரா என அமையலாம்.