15 ஆண்டுகளில் முதல்முறையாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியிலிருந்து நாதன் லயன் நீக்கம்: நியூசிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
பெர்த்தில் தொடங்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 2011-ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதற்குப் பிறகு, 15 ஆண்டுகளில் முதல்முறையாக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் (Nathan Lyon) அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 577 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஷேன் வார்னுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் இரண்டாவது அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக உள்ள 39 வயதான லயனுக்குப் பதிலாக, 29 வயது அறிமுக ஆஃப்-ஸ்பின்னர் கோரி ரோச்சிசியோலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
2026ல் சரிந்த பந்துவீச்சு ஃபார்ம்
இந்திய சுற்றுப்பயணத்தில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?
நடப்பு 2026-ஆம் ஆண்டில் விளையாடிய 4 டெஸ்ட் போட்டிகளில் 41.20 என்ற சராசரியுடன் வெறும் 10 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியதும், ஒரு விக்கெட் வீழ்த்தச் சராசரியாக 94 பந்துகளை எடுத்துக்கொண்டதும் லயனின் நீக்கத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி, சமீபத்திய போட்டிகளில் லயனின் தாக்கம் குறைந்திருந்தாலும், 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்திய சுற்றுப்பயணத்தில் (இந்திய மண்ணில் 56 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்) அவருக்கு முக்கியப் பங்கு இருப்பதால் அவசரப்பட்டு ஓய்வு முடிவை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
அறிமுக வீரர் ஜாக் கிளேட்டன் சேர்ப்பு
ஸ்டீவ் ஸ்மித் திரும்பிய நிலையில் லபுஷேன் நீக்கம்
காயத்திலிருந்து மீண்டுள்ள ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ள நிலையில், ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரில் 74.83 சராசரியுடன் ரன் குவித்த குயின்ஸ்லாந்து பேட்டர் ஜாக் கிளேட்டன் (Jack Clayton) முதல்முறையாக டெஸ்ட் அணிக்குத் தேர்வாகியுள்ளார்.
அதேநேரம் மார்னஸ் லபுஷேன், கூப்பர் கானோலி மற்றும் பியூ வெப்ஸ்டர் ஆகியோர் அணியிலிருந்து கைவிடப்பட்டுள்ளனர். ஷெஃபீல்ட் ஷீல்ட் அடுத்த சுற்று முடிந்த பிறகு 14-வது வீரர் அணியில் சேர்க்கப்பட உள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான ஆஸ்திரேலிய அணி விவரம்:
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜாக் கிளேட்டன், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மைக்கேல் நேசர், மேத்யூ ரென்ஷா, கோரி ரோச்சிசியோலி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.