Loading...
ஒரே அணியை 2 முறை வீழ்த்திய முதல் அசோசியேட் நாடு! தென்னாப்பிரிக்காவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து நமீபியா சாதனை
தென்னாப்பிரிக்காவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து நமீபியா கிரிக்கெட் அணி சாதனை

ஒரே அணியை 2 முறை வீழ்த்திய முதல் அசோசியேட் நாடு! தென்னாப்பிரிக்காவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து நமீபியா சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 29, 2026
08:34 am

செய்தி முன்னோட்டம்

நமீபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில், வலுவான தென்னாப்பிரிக்க அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபியா அணி உலகக் கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை நமீபியா வீழ்த்துவது இது இரண்டாவது முறையாகும். இதன் மூலம் சர்வதேச டி20 வடிவத்தில் தென்னாப்பிரிக்காவை இரண்டு முறை வீழ்த்திய உலகின் முதல் அசோசியேட் நாடு என்ற மகத்தான வரலாற்று சாதனையை நமீபியா படைத்துள்ளது.

நமீபியா

தொடக்க வீரர்களின் அதிரடியால் 163 ரன்கள் குவித்த நமீபியா

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணிக்குத் தொடக்க வீரர்கள் ஜான் ஃபிரைலிங்க் (60 ரன்கள்) மற்றும் லாரன் ஸ்டீன்காம்ப் (41 ரன்கள்) இணைந்து முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்து சிறப்பான அடித்தளம் அமைத்தனர்.

இருப்பினும், நடுவரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் நமீபியா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தென்னாப்பிரிக்கா தரப்பில் பிரெனலன் சுப்ராயன் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் பிஜோர்ன் ஃபோர்டுயின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

தென்னாப்பிரிக்கா

டெவால்ட் பிரேவிஸின் அதிரடியையும் மீறிச் சரிந்த தென்னாப்பிரிக்கா

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு நமீபிய பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே கடும் நெருக்குதல் அளித்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் அதிரடி காட்டிய டெவால்ட் பிரேவிஸ் 50 பந்துகளில் 75 ரன்கள் (4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) விளாசி தென்னாப்பிரிக்காவிற்கு வெற்றி வாய்ப்பை தக்க வைத்தார்.

ஆனால் 18வது ஓவரில் பிரேவிஸ் ஆட்டமிழந்ததும், தென்னாப்பிரிக்காவின் வெற்றி வாய்ப்பு பறிபோய் 20 ஓவர்களில் 145/9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ADVERTISEMENT

நமீபியா பந்துவீச்சு அபாரம்

நமீபிய பந்துவீச்சாளர்களின் அபாரமான கூர்மையான பந்துவீச்சு

நமீபியா அணியின் இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு அவர்களின் கூர்மையான பந்துவீச்சே முக்கியக் காரணமாக அமைந்தது.

இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ரூபன் டரம்பல்மேன் 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஜேஜே ஸ்மித் 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தென்னாப்பிரிக்காவை முடக்கினர்.

கடந்த 2022 டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்து தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியிருந்த நிலையில், தற்போது நமீபியா இரண்டாவது முறையாக தென்னாப்பிரிக்காவை சாய்த்து தன் முத்திரையைப் பதித்துள்ளது.

ADVERTISEMENT