ஊக்கமருந்து சோதனையில் தோல்வி : இந்திய காமன்வெல்த் சாம்பியன் சஞ்சிதா சானுவுக்கு நான்கு ஆண்டுகள் தடை
செய்தி முன்னோட்டம்
இரண்டு முறை காமன்வெல்த் கேம்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானுவுக்கு, கடந்த ஆண்டு ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததற்காக, தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை நான்கு ஆண்டு தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் குஜராத்தில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் நடந்த சோதனையின் போது, உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள டிரோஸ்டனோலோன் மெட்டாபொலைட் என்ற அனபோலிக் ஸ்டீராய்டை சஞ்சிதா எடுத்துக் கொண்டது உறுதி செய்யப்பட்டது.
இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தின் தலைவர் சஹ்தேவ் யாதவ் இதை உறுதிப்படுத்தினார்.
நேர்மறை சோதனையின் விளைவாக அவரது தேசிய விளையாட்டு வெள்ளிப் பதக்கம் பறிக்கப்படும். இது சஞ்சிதாவுக்கு இது ஒரு பெரிய பின்னடைவாகும்.
சஞ்சிதா சானு
ஊக்கமருந்து சர்ச்சையில் தொடர்ந்து சிக்கும் சஞ்சிதா சானு
நவம்பர் 2017 இல் அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன், அனபோலிக் ஸ்டீராய்டு டெஸ்டோஸ்டிரோனுக்கு நேர்மறை சோதனை செய்ததால், 2018 இல் சர்வதேச பளு தூக்குதல் கூட்டமைப்பால் அவர் தடை செய்யப்பட்டார்.
இருப்பினும், 2020 ஆம் ஆண்டில், சஞ்சிதாவின் மாதிரியைக் கையாள்வதில் ஏற்பட்ட இணக்கமின்மை காரணமாக அவருக்கு எதிரான ஊக்கமருந்து குற்றச்சாட்டை கைவிட்டதால் அப்போது தப்பித்தார்.
இந்நிலையில், தற்போது தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையிடம் சிக்கி, நான்கு வருட தடையை எதிர்கொண்டுள்ளார்.
இதற்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்வாரா என்பது குறித்து அவரிடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.