சென்னை குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம்
தி இந்து லிட் ஃபார் லைஃப் விழாவில் தனது சுயசரிதை புத்தகம் பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் தனது சென்னை தொடர்பு குறித்து மிக உருக்கமாக பேசினார். அக்டோபர் 2009இல், அக்ரம் லாகூரிலிருந்து சிங்கப்பூருக்கு ஏர் ஆம்புலன்ஸில் மனைவியின் சிகிச்சைக்காக பயணம் செய்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக விமானம் நிறுத்தப்பட்ட நிலையில் அவரது மனைவி மயக்கமடைந்துள்ளார். தங்களிடம் இந்திய விசா இல்லாததால் செய்வதறியாது அக்ரம் கண்ணீர் விட்ட நிலையில், அங்கிருந்த இந்திய அதிகாரிகள் விசா விவகாரத்தை தாங்கள் பார்த்துக் கொள்வதாகக் கூறி, உடனடியாக சென்னை மருத்துவமனையில் மனைவியை அனுமதிக்க அனுப்பி வைத்துள்ளனர். கடினமான காலகட்டத்தில் தனக்கு உதவிய அதிகாரிகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.
இந்தியர்களால் கொண்டாடப்படும் வாசிம் அக்ரம்
லாகூரில் பிறந்த பஞ்சாபியான அக்ரம், இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் புகழ் பெற்றவர் மேலும் இரு நாடுகளுக்கும் இடையே கிரிக்கெட் உறவுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அடிக்கடி அழைப்பு விடுத்துள்ளார். தி இந்து நிகழ்வில் பேசியபோது, வாசிம் அக்ரம் 1999இல் சென்னையில் நடந்த பாகிஸ்தானின் புகழ்பெற்ற டெஸ்ட் வெற்றியையும் நினைவு கூர்ந்தார். ஸ்விங் மற்றும் சீம் என இரண்டிலும் மாஸ்டரான அக்ரம் பாகிஸ்தானுக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 23.62 சராசரியில் 414 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் அக்ரம் 356 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 502 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியான கராச்சி கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.