'அஸ்வின், ஷமியை விட இந்திய அணியின் வெற்றிதான் முக்கியம்' : எம்எஸ்கே பிரசாத்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத், ரோஹித் ஷர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் அணித் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அஸ்வின் ரவிச்சந்திரன் மற்றும் முகமது ஷமி ஆகிய வீரர்களில் யாரைத் தேர்வு செய்வது என்பதில் சர்ச்சை நீடித்து வருகிறது. அவர்களின் அற்புதமான சாதனைகள் இருந்தபோதிலும், தற்போதைய உலகக் கோப்பைக்கான விளையாடும் லெவனில் இரு வீரர்களுக்கும் உத்தரவாதமான இடங்கள் இல்லை. இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து பதிலளித்த முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், "அஸ்வின் மற்றும் முகமது ஷமிக்கு உலகக் கோப்பையை வெல்வதை விட நற்பெயர் முக்கியமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனிநபர்களை விட அணியின் வெற்றியே முக்கியம்
அஸ்வின் ரவிச்சந்திரன் உலக அளவில் டெஸ்ட் பந்துவீச்சாளர்களில் முதலிடத்தில் இருந்தார். மேலும், சுழற்பந்து வீச்சாளர்களில் முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் ஒருவராகவும் உள்ளார். அணியில் நீண்ட காலம் ஒயிட் பால் கிரிக்கெட்டில் விளையாடாவிட்டாலும், தற்போது ஒருநாள் உலகக்கோப்பைக்காக மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் முழுமையாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதேபோல், ஒரு காலத்தில் இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்த முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டாலும், இன்னும் போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவிலை. இது கசப்பான உண்மையாக இருந்தாலும், களநிலவரத்திற்கு ஏற்ப விளையாடும் லெவனை அணி நிர்வாகம் சரியாக தேர்வு செய்வதாக எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும் தனிநபர்களை விட அணியின் வெற்றியே முக்கியம் எனவும், அஸ்வினும் ஷமியும் கூட இதைத்தான் விரும்புவார்கள் என்றும் தெரிவித்தார்.