Loading...
எம்எஸ் தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: ரூ.100 கோடி வழக்கின் புதிய பின்னணி
தோனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

எம்எஸ் தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: ரூ.100 கோடி வழக்கின் புதிய பின்னணி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 17, 2026
05:43 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது எழுந்த சூதாட்ட சர்ச்சையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் தோனிக்கும் தொடர்பு இருப்பதாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தனியார் தொலைக்காட்சி விவாதங்களில் குற்றம்சாட்டினார். இது தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி, சம்பத்குமாருக்கு எதிராக 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி 2014 ஆம் ஆண்டு எம்எஸ் தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீண்ட காலமாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சம்பத்குமார் மனு

சம்பத்குமார் தாக்கல் செய்த 3 இடையீட்டு மனுக்கள்

இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணையை முழுமையாக வீடியோ பதிவு செய்யக் கோரி ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 முக்கிய இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ஆணையர் ஜெயஸ்ரீ முன்னிலையில், தோனியின் சாட்சியத்தைப் பதிவு செய்யப்படவுள்ளது.

இந்த சாட்சிப் பதிவை கண்காணிக்க ஒரு நீதித்துறை அதிகாரியை நியமிக்க வேண்டும் என சம்பத்குமார் கோரியுள்ளார்.

மேலும், சாட்சிகள் விசாரணை முழுவதையும் கட்டாயமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கோரிக்கைகள்

சாட்சிகள் விசாரணை குறித்த கட்டுப்பாட்டு கோரிக்கைகள்

பதிவு செய்யப்படும் வீடியோ பதிவின் நகல்கள் தமக்கும், நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் அதிகாரிக்கும் வழங்கப்பட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தோனி ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் என்பதற்காக அவரது சாட்சிப் பதிவை நட்சத்திர விடுதியிலோ அல்லது தனியார் இடங்களிலோ நடத்தக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணை நீதிமன்ற வளாகத்தில் அல்லது ஏதேனும் ஒரு அரசு கட்டிடத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று சம்பத்குமார் தனது மனுவில் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

உத்தரவு

ரூ.10 லட்சம் கட்டணம் செலுத்த தோனிக்கு உத்தரவு

நீண்ட காலமாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் தொடர்புடைய சிடி ஆவணங்களை எழுத்து வடிவமாக மாற்ற நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, அந்த ஆவணங்களை மொழிபெயர்க்கவும், தட்டச்சு செய்யவும் கட்டணமாக ரூ.10 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் தோனிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் தொடர்ச்சியாக தற்போது சாட்சிகள் விசாரணையை வீடியோ பதிவு செய்யக் கோரி புதிய இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

பதில்

எம்எஸ் தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தவைதானா என்பதை முடிவு செய்ய, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

மனுக்களை விரிவாக ஆய்வு செய்த நீதிபதி, இதுகுறித்து கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டார்.

மேலும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 9 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

ADVERTISEMENT