ஐபிஎல்லில் அனைத்து சீசன்களிலும் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்களின் பட்டியல்
ஐபிஎல் 2024 ஏலம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) துபாயில் நடைபெற உள்ள நிலையில், இதில் 10 அணிகள் மொத்தம் 77 வீரர்களை தங்கள் அணியில் சேர்க்க உள்ளனர். ஏலத்தில் பங்கேற்க 1000க்கும் மேற்பட்டோர் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்த நிலையில், அதில் 333 வீரர்களுக்கு ஏலத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வெளியே ஐபிஎல் ஏலம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில், 2008இல் எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸில் இணைந்தது முதல் போட்டியின் வரலாற்றில் சாம் கரண் மிகவும் விலையுயர்ந்த வீரராக மாறியது வரை, ஐபிஎல்லின் ஒவ்வொரு ஏலத்திலும் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களை இதில் பார்க்கலாம்.
ஐபிஎல் தொடக்க சீசனான 2008 முதல் 2010 வரை அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் எம்எஸ் தோனி டி20 உலகக்கோப்பையின் முதல் பட்டத்தை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்ததால், ஐபிஎல் தொடக்க சீசனில் விற்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த வீரர் ஆனார். சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.9.50 கோடி கொடுத்து எம்எஸ் தோனியை வாங்கியது. 2009இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டருமான கெவின் பீட்டர்சனை ரூ.9.80 கோடிக்கு வாங்கியது. அதே சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாப்பை ரூ.9.80 கோடிக்கு வாங்கியது. 2010 ஏலத்தில் நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் ரூ.4.80 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸிலும், கீரன் பொல்லார்டு ரூ.4.80 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியிலும் இணைந்தனர்.
ஐபிஎல் 2011 முதல் 2013 வரை அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள்
இந்திய தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பிர் 2011 ஏலத்தில் விற்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த வீரர் ஆவார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.14.90 கோடிக்கு அவரை வாங்கி அணியின் கேப்டனாகவும் அறிவித்தது. 2011 முதல் 2017 வரை அந்த அணிக்காக விளையாடிய கவுதம் காம்பிர் 2012 மற்றும் 2014 என இரண்டு சீசன்களில் பட்டம் வென்று கொடுத்தார். கொச்சி டஸ்கர்ஸ் அணி கலைக்கப்பட்ட பிறகு, 2012 ஏலத்தில் பங்கேற்ற ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.12.80 கோடிக்கு வாங்கியது. 2013 ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் ரூ.6.30 கோடிக்கு மும்பை இந்தியன்ஸால் வாங்கப்பட்டார். ஆனால் அங்கு வெறும் மூன்று ஆட்டங்களில் விளையாடி 18 சராசரியில் 36 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ஐபிஎல் 2014 மற்றும் 2015 : இரண்டு சீசன்களில் ஏலத்தில் ஆதிக்கம் செலுத்திய யுவராஜ் சிங்
ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் 2014 ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் அதிகபட்சமாக ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்டார். அந்த சீசனில், 14 போட்டிகளில் 376 ரன்களை குவித்து, அந்த அணியில் இரண்டாவது அதிக ரன் எடுத்த வீரர் ஆனார். இருப்பினும், ராயல் சேலஞ்சர்ஸ் அந்த தொடரில் எட்டு அணிகளில் ஏழாவது இடத்தைப் பிடித்தது படுதோல்வி அடைந்து வெளியேறியது. 2014இல் அதிக தொகைக்கு வாங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் யுவராஜ் சிங்கை விடுவித்த நிலையில், அடுத்த ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி யுவராஜ் சிங்கை ரூ.16 கோடி கொடுத்து வாங்கியது. ஆனால், முந்தைய சீசனைப் போல டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் அவரால் சோபிக்க முடியாமல் போனதோடு, அணியும் பரிதாபகரமான தோல்வியை சந்தித்தது.
ஐபிஎல் 2016 முதல் 2018 வரை ஆல்ரவுண்டர்களின் ஆதிக்கம்
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் 2016 ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் ரூ.9.50 கோடிக்கு வாங்கப்பட்டார். அந்த சீசனில் ஷேன் வாட்சன் 16 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை எடுத்ததோடு, பேட்டிங்கிலும் 179 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 2017 ஐபிஎல் ஏலத்தில் ரூ.14.50 கோடிக்கு ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸால் அதிக தொகைக்கு வாங்கப்பட்டார். அந்த அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது. 2018இல் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் கலைக்கப்பட்ட நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் பென் ஸ்டோக்ஸை ரூ.14.50 கோடிக்கு அதிக தொகை கொடுத்து வாங்கியது. அந்த அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஐபிஎல் 2019 முதல் 2022 வரை
2019 ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெயதேவ் உனத்கட்டை ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. அதேசமயம், கிங்ஸ் லெவன் பஞ்சாப் வருண் சக்ரவர்த்திக்காக அதே அளவு தொகையை செலவளித்தது. இரு அணிகளாலும் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2020 ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் பாட் கம்மின்ஸை அதிகபட்சமாக ரூ.15.50 கோடி கொடுத்து வாங்கியது. தென்னாப்பிரிக்கா ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 2021 ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு ரூ.16.50 கோடிக்கு விற்கப்பட்டார். 2022 ஏலத்தில் விக்கெட் கீப்பிங் பேட்டர் இஷான் கிஷனை ஒப்பந்தம் செய்ய மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக ரூ.15.25 கோடி செலவழித்தது.
ஐபிஎல் 2023இல் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட சாம் கரண்
பஞ்சாப் கிங்ஸ் 2023 ஏலத்தில், ஐபிஎல்லில் இதுவரை இல்லாத வகையில் ரூ.18.50 கோடி ரூபாய் செலவழித்து சாம் கரணை வாங்கியது. இந்த தொடரில் ஆல்ரவுண்டர் சாம் கரண் 376 ரன்களும் 10 விக்கெட்டுகளும் எடுத்தாலும், பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. முந்தைய சீசன்களை பார்க்கையில், பெரும்பாலான முறை அதிக தொகை கொடுத்து வாங்கும் அணிகள் தொடரில் பிளேஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமலேயே வெளியேறிய நிகழ்வுகள் தான் நடந்துள்ளன. இந்நிலையில், ஐபிஎல் 17வது சீசனுக்கான ஏலத்தில் எந்த வீரருக்கு அதிக தொகை கிடைக்கும் என்பது செவ்வாய்க்கிழமை தெரிந்துவிடும்.