LOADING...
'போரே பெருமை என்றால்...' பிரதமர் மோடியின் கருத்துக்கு பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி பதில்
பிரதமர் மோடியின் கருத்துக்கு மொஹ்சின் நக்வி பதில்

'போரே பெருமை என்றால்...' பிரதமர் மோடியின் கருத்துக்கு பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி பதில்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 29, 2025
04:25 pm

செய்தி முன்னோட்டம்

ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கு, பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மொஹ்சின் நக்வி பதில் கொடுத்துள்ளார். முன்னதாக, இடஙகிய பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை ஆபரேஷன் சிந்தூருடன் ஒப்பிட்டு தேசியப் பெருமைக்குரிய விஷயமாக வர்ணித்திருந்தார். இந்நிலையில், மோடியின் இந்தக் கருத்துக்குச் சமூக ஊடகத்தில் பதிலளித்த மொஹ்சின் நக்வி, "போர் என்பதுதான் பெருமையை அளவிடும் அளவுகோலாக இருக்குமானால், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அடைந்த அவமானகரமான தோல்விகளை வரலாறு ஏற்கெனவே நிரூபித்துள்ளது." என்று பதிவிட்டுள்ளார்.

குற்றச்சாட்டு

விளையாட்டில் அரசியலை கலப்பதாகக் குற்றச்சாட்டு

அவரது இந்தக் கருத்து, ஆசிய கோப்பை இறுதிப் போட்டியைச் சுற்றியுள்ள அரசியல் ரீதியான விவாதங்களை மேலும் சூடாக்கியுள்ளது. இந்தப் பிரச்சினை, துபாயில் நடந்த பரிசளிப்பு விழாவின்போது தொடங்கியது. அப்போது இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்கள், நக்வியிடம் இருந்து ஆசியக் கோப்பையை ஏற்க மறுத்ததால், கோப்பை மேடையில் இருந்து அகற்றப்பட்டு, பரிசளிப்பு விழா பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இது விளையாட்டையும் அரசியலையும் கலப்பதாகக் கூறி விமர்சனங்களை எழுப்பியது. விளையாட்டுப் போட்டியில் பிரதமர் மோடி போர் மற்றும் அரசியலை இழுப்பதாக நக்வி குற்றம் சாட்டினார். இது அரசியல் விரக்தியைக் காட்டுவதாகவும், விளையாட்டின் உன்னத உணர்வைக் குறைப்பதாகவும் அவர் சாடினார். எனினும், நக்வியின் கருத்துக்கு இந்தியர்கள் பதிலடி கொடுத்து பதிவிட்டு வருகின்றனர்.