21 வருடங்களில் இந்த சாதனையை செய்த முதல் இந்தியர் ஆனார் முகமது சிராஜ்
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) நடைபெற்ற ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இலங்கையின் டாப்-ஆர்டரை எளிதாக துவம்சம் செய்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் யாராலும் எளிதாக மறக்க முடியாத சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் டாஸ் வென்று இலங்கை கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில், முதல் 12 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்த ஆறு விக்கெட்டுகளில் ஐந்து விக்கெட்டுகளை முகமது சிராஜ் தனது முதல் மூன்று ஓவர்களில் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் ஐந்து விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தார். மேலும், பின்னர் மற்றொரு விக்கெட்டையும் எடுக்க, போட்டியில் மொத்தமாக 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அனில் கும்ப்ளேவுக்கு அடுத்து இரண்டாவது வீரர்
அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு ஒரு பெரிய தொடரின் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் என்ற சிறப்பை முகமது சிராஜ் பெற்றுள்ளார். முன்னதாக, அனில் கும்ப்ளே 1993இல் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான சிஏபி ஜூப்ளி போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கிடையே, ஒரு நாள் போட்டியில் (2002 முதல்) முதல் 10 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை சிராஜ் பெற்றுள்ளார். மேலும், ஒருநாள் போட்டியில் முதல் 10 ஓவர்களில் இந்தியா 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நிகழ்வும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.