400 விக்கெட்களை வீழ்த்திய ஐந்தாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர்! முகமது ஷமி சாதனை!
நாக்பூரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளில், இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, டேவிட் வார்னரின் விக்கெட்டைக் கைப்பற்றி தொடக்கத்திலேயே ஆஸ்திரேலிய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தினார். மேலும் இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டி, கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். டெஸ்டில் 217 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 159 விக்கெட்டுகள் மற்றும் டி20 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை ஷமி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், கபில் தேவ், ஜாகீர் கான், ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் ஷமி இந்த சாதனையை நிகழ்த்திய ஐந்தாவது வீரராக இணைந்துள்ளார்.
இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டி நிலவரம்
நாக்பூரில் நடந்து வரும் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸை தொடங்க களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. எனினும் பின்னர் சுதாரித்துக் கொண்டு ஸ்மித் மற்றும் லாபுசாக்னே பொறுப்புடன் ஆடியதால், உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் ஆடினர். எனினும் உணவு இடைவேளை முடிந்து வந்த பிறகு அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழலில் சிக்கிய ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களுக்கு சுருண்டது. ஜடேஜா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.