INDvsNZ Semifinal : ஒருநாள் உலகக்கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட் வீழ்த்தி முகமது ஷமி சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் புதன்கிழமை (நவம்பர் 15) நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தனது மூன்றாவது விக்கெட்டைப் பெற்று இந்த மைல்கல்லை எட்டினார். முகமது ஷமி 17 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். முன்னதாக, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இதற்கு முன்பு 19 ஆட்டங்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியதே மிக மேகமாக விக்கெட் எடுத்ததாக இருந்தது. இதற்கிடையே, உலகக்கோப்பையில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் மற்றும் ஒட்டுமொத்தமாக ஏழாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ஷமி பெற்றுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் முதல் பவர்பிளேயில் 50 விக்கெட்டுகள்
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் பவர்பிளேவான முதல் 10 ஓவர்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஷமி மேலும் ஒரு மைல்கல்லை எட்டினார். நியூசிலாந்திற்கு எதிராக தனது இரண்டாவது விக்கெட் மூலம் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். 97 இன்னிங்ஸ்களில் 51 முதல் பவர்பிளே விக்கெட்டுகளை எடுத்துள்ள ஷமியின் எகானமியின் விகிதம் 4.49 ஆக உள்ளது. இதற்கிடையில், நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் முகமது ஷமி ஆறு போட்டிகளில் மட்டும் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 191 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.