ஆஷஸ் தொடரின் நாயகன் ஸ்டார்க்கிற்கு மகுடம்! ஐசிசியின் டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரர் விருது வென்று அசத்தல்!
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், 2025 டிசம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த ஆடவர் வீரர் விருதை வென்றுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக உள்நாட்டில் நடந்த விறுவிறுப்பான ஆஷஸ் 2025-26 தொடரில் அவர் வெளிப்படுத்திய அபாரமான ஆட்டத்திற்காக இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 35 வயதான மிட்செல் ஸ்டார்க், ஆஷஸ் தொடர் முழுவதும் பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் மிரட்டலாகச் செயல்பட்டார். டிசம்பர் மாதத்தில் மட்டும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், பேட்டிங்கில் 139 ரன்களையும் குவித்தார். ஒட்டுமொத்த ஆஷஸ் தொடரில் 31 விக்கெட்டுகள் மற்றும் இரண்டு அரைசதங்களுடன் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
போட்டி
கடும் போட்டியில் வென்ற மிட்செல் ஸ்டார்க்
இந்த விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜஸ்டின் கிரீவ்ஸ் மற்றும் நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி ஆகியோரும் இருந்தனர். ஜஸ்டின் கிரீவ்ஸ் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் விளாசி ஆச்சரியப்படுத்தினார். ஜேக்கப் டஃபி 23 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இருப்பினும், ஆஷஸ் போன்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரில் ஆதிக்கம் செலுத்தியதால் ஸ்டார்க்கிற்கு இந்த விருது வழங்கப்பட்டது. விருது வென்றது குறித்துப் பேசிய மிட்செல் ஸ்டார்க், "ஐசிசி மாதத்தின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமையாக இருக்கிறது. அதிலும் சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரை வென்ற கையோடு இந்த விருது கிடைத்தது கூடுதல் சிறப்பு." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.