மிட்செல் மார்ஷின் சதம் வீண்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, ஸ்பென்சர் ஜான்சன் (ஃபில் சால்ட், ஹாரி புரூக்) மற்றும் ரிலே மெரிடித் (அனுரின் டொனால்ட், டாம் பான்டன்) ஆகியோரின் வேகத்தில் பவர்பிளே ஓவர்களுக்குள்ளாகவே 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜேம்ஸ் கோல்ஸ் (33) மற்றும் ஜோர்டான் காக்ஸ் (23) ஆகியோர் 44 ரன்கள் சேர்த்து அணியை மீட்ட நிலையில், ஆடம் ஜாம்பா கோல்ஸையும், நிகில் சவுத்ரி காக்ஸையும் ஆட்டமிழக்கச் செய்தனர். அதன்பின் லியாம் டாசன் 14 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
சவாலான இலக்கு
சாம் கரண் மற்றும் ஜேமி ஓவர்டன் இறுதிக்கட்ட அதிரடி
பாதி அணியை இழந்து இங்கிலாந்து தத்தளித்த சூழலில், இடதுகை ஆல்-ரவுண்டர் சாம் கரண் பொறுப்பேற்று அதிரடியாக விளையாடினார்.
வெறும் 28 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் விளாசிய அவர், ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களைக் கடைசி ஓவர்களில் திணறடித்தார்.
அவருக்கு மறுமுனையில் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்த ஜேமி ஓவர்டன், வெறும் 9 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 20 ரன்கள் குவித்தார்.
இவர்களது இறுதிக்கட்ட அதிரடியால் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்டியது.
இங்கிலாந்து வெற்றி
மிட்செல் மார்ஷின் தனிநபர் போராட்டம் வீண்
182 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், கேப்டன் மிட்செல் மார்ஷ் தனி ஒருவனாகப் போராடி 56 பந்துகளில் 9 பவுண்டரிகள், 9 சிக்சர்களுடன் 119 ரன்கள் குவித்தார்.
ஆனால் மறுமுனையில் சக வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஹென்றி குரோகோம்ப் (3/28) மார்ஷ் மற்றும் ஜோயல் டேவிஸ் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஆட்டத்தை மாற்றினார்.
இதனால் ஆஸ்திரேலியா 174/7 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, 3-1 என டி20 தொடரையும் இங்கிலாந்திடம் இழந்தது. கடைசிப் போட்டி டிசம்பர் 2-ஆம் தேதி கான்பெராவில் நடைபெறவுள்ளது.