மீண்டு வரும் ஃபார்முலா 1 ஜாம்பவான்! 12 ஆண்டுகளுக்குப் பிறகு படுக்கையில் இருந்து எழுந்த மைக்கேல் ஷூமேக்கர்
செய்தி முன்னோட்டம்
ஏழு முறை ஃபார்முலா 1 உலக சாம்பியன் பட்டம் வென்ற மைக்கேல் ஷூமாக்கர், தனது நீண்டகால மருத்துவ போராட்டத்தில் ஒரு நம்பிக்கைக்குரிய நிலையை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2013-ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையில் நிகழ்ந்த பனிச்சறுக்கு விபத்திற்கு பிறகு, ஷூமாக்கர் முற்றிலும் படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தற்போது அவர் படுக்கையில் இருந்து எழுந்து சக்கர நாற்காலியில் அமரும் நிலைக்கு முன்னேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 57 வயதான ஷூமேக்கர், இப்போது சக்கர நாற்காலியின் உதவியுடன் தனது இல்லத்தில் வலம் வர முடிகிறது என ஊடக செய்திகள் கூறியுள்ளது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
மருத்துவம்
மருத்துவக் குழுவின் அர்ப்பணிப்பு
ஷூமேக்கரின் உடல்நிலை குறித்த விபரங்களை அவரது மனைவி கொரின்னா மற்றும் குடும்பத்தினர் கடந்த 12 ஆண்டுகளாக பெரும் ரகசியமாக பாதுகாத்து வருகின்றனர். இருப்பினும், சமீபத்திய தகவலின்படி, அவர் தன்னைச் சுற்றி நடப்பவற்றை ஓரளவுக்கு புரிந்து கொள்கிறார் என்றும், வெளிப்புறத் தூண்டுதல்களுக்கு எதிர்வினை ஆற்றுகிறார் என்றும் கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்பெயினில் உள்ள அவரது இல்லங்களில் தங்கி, 24 மணிநேரமும் செவிலியர்கள், பிசியோதெரபிஸ்டுகள் அடங்கிய நிபுணர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. ஒரு வாரத்திற்கு இதற்காக பல லட்சம் ரூபாய் செலவிடப்படுவதாக கூறப்படுகிறது. ஃபெராரி (Ferrari) அணிக்காக தொடர்ந்து 5 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த ஷூமேக்கரின் இந்த முன்னேற்றம், உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.