
INDvsAUS ஒருநாள் தொடர்: கேமரூன் கிரீனுக்குப் பதிலாக ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் மார்னஸ் லாபுஷேன் சேர்ப்பு
செய்தி முன்னோட்டம்
ஆல் ரவுண்டரான கேமரூன் கிரீனுக்கு ஏற்பட்டுள்ள சிறிய காயம் காரணமாக, இந்தியாவுக்கு எதிரான வரவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். இதைத் தொடர்ந்து, நட்சத்திர பேட்ஸ்மேனான மார்னஸ் லாபுஷேன் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்ட அறிவிப்பில், கிரீனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பது ஒரு தற்காப்பு நடவடிக்கை என்றும், அவர் விரைவில் குணமடைந்து அக்டோபர் 28 அன்று மேற்கு ஆஸ்திரேலியாவிற்காக ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியில் களமிறங்குவார் என்றும் தெரிவித்துள்ளது. ஆஷஸ் தொடருக்கான அவரது தயாரிப்புக்கு இந்த ஓய்வு உதவும் என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது.
வீரர்கள் விபரம்
ஆஸ்திரேலிய அணியின் புதுப்பிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்
கிரீன் இல்லாத நிலையில், மார்னஸ் லாபுஷேன் தனது சமீபத்திய உள்ளூர் போட்டிகளின் சிறப்பான ஃபார்மை இந்தியாவிற்கு எதிராகத் தொடருவார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நம்புகிறது. இந்த மாற்றம் லாபுஷேனுக்கு ஒருநாள் போட்டிகளில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்குகிறது. புதுப்பிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கொன்னோலி, பென் ட்வார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மேத்யூ குனேமன், மார்னஸ் லாபுஷேன், மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், (இரண்டாவது போட்டி முதல் ஆடம் ஜாம்பா, அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ்).