
தோனியை நீக்கும் தைரியமான முடிவை ருதுராஜ் எடுக்க வேண்டும்; முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் எம்எஸ் தோனி தொடர்ந்து விளையாடுவதை கடுமையாக விமர்சித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
சிஎஸ்கே அணி ஐபிஎல் 2023 பட்டத்தை வென்ற பிறகு எம்எஸ் தோனி ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கிரிக்பஸிடம் இதுகுறித்து பேசிய மனோஜ் திவாரி, நடந்து வரும் ஐபிஎல் 2025 சீசனில் தோனியின் சமீபத்திய செயல்திறன் குறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் தோனியின் எதிர்காலம் குறித்து உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
பின்னணி
விமர்சனத்தின் பின்னணி
தற்போது 43 வயதான தோனி, சனிக்கிழமை (ஏப்ரல் 5) டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் எடுத்தார்.
இதில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். விஜய் சங்கருடன் இணைந்து 84 ரன்கள் எடுத்த போதிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இது ஐபிஎல் 2025 தொடரில் சிஎஸ்கே விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் பெறும் மூன்றாவது தோல்வியாகும்.
மேலும், சொந்த மைதானத்தில் தொடர்ந்து இரண்டாவது தோல்வியைப் பெற்றுள்ளது.
முழங்கால் பிரச்சினை
முழங்கால் பிரச்சினைக்கும் விளாசல்
தோனியின் முழங்கால் பிரச்சினைகள் 10 ஓவர்களுக்கு மேல் பேட்டிங் செய்யும் அவரது திறனைக் கட்டுப்படுத்துகின்றன என்ற தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் கூறியதைக் குறிப்பிட்ட மனோஜ் திவாரி, 20 ஓவர்கள் முழுமையாக நன்றாக கீப்பிங் செய்யும் அவரால் பேட்டிங் செய்ய முடியாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், எம்எஸ் தோனியின் புகழ்பெற்ற அந்தஸ்து அவரது சமீபத்திய ஃபார்மால் மறைக்கப்படுவதாகவும், அணி உணர்வுகளை விட அணியின் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"அவர் சம்பாதித்த மரியாதையுடன், சரியான நேரத்தில் அவர் போட்டியிலிருந்து விலகியிருக்க வேண்டும். சிஎஸ்கே கடுமையான முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது." என்று திவாரி வலியுறுத்தினார்.