படுமோசமான பிட்ச்! லக்னோ கிரிக்கெட் மைதான கியூரேட்டர் பணியிலிருந்து நீக்கம்!
நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது டி20 போட்டியில் ரேங்க் டர்னர் பிட்சை தயார் செய்ததற்காக, லக்னோ பிட்ச் கியூரேட்டர் நீக்கப்பட்டுள்ளார். லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஜனவரி 29 அன்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இரு அணிகளும் சேர்த்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 99 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியா 19.5 ஓவர்களில் தான் இலக்கை எட்டி வென்றது. இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்கு முன்னதாக லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தின் கியூரேட்டர் பணியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சஞ்சீவ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளதாக, பிடிஐ செவ்வாய்க்கிழமை (ஜனவரி 31) தெரிவித்துள்ளது.
புதிய கியூரேட்டர் சஞ்சீவ் குமார் அகர்வால் பின்னணி
புதிய பிட்ச் கியூரேட்டராக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சீவ் குமார் அகர்வால் இதற்கு முன்பு வங்கதேசத்தில் பிட்ச்களை தயார் செய்த அனுபவம் கொண்டுள்ளார். வங்கதேசத்தில் கடந்த அக்டோபரில் பணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது லக்னோ பிட்சை தயார் செய்யும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் ஐபிஎல் வரும் நிலையில், அதற்கு ஏற்றவாறு பிட்சை தயார் செய்ய, மூத்த பிசிசிஐ கண்காணிப்பாளர் தபோஷ் சாட்டர்ஜியுடன் அவர் இணைந்து பணியாற்றுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அகர்வால் மிகவும் திறமையான பிட்ச் கியூரேட்டர் என்றும், பிட்ச் நிலைமையை இன்னும் ஒரு மாதத்த்திற்குள் உரிய தரத்தில் தயார் செய்து விடலாம் என உத்தரபிரதேச கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக பிடிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.