ஆர்சிபி vs எல்எஸ்ஜி : காயத்தால் பாதியில் வெளியேறிய கே.எல்.ராகுல்! எல்எஸ்ஜி அணியின் கேப்டனாக செயல்படும் க்ருனால் பாண்டியா!
திங்கட்கிழமை (மே 1) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில், ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பவுண்டரி அடிக்க ராகுல் அதை தடுக்க முயன்றார். பந்தை துரத்தும்போது ராகுல் தனது வலது தொடை தசையில் காயமடைந்தார். பிசியோக்கள் அவரை சோதனை செய்தபோது அவர் மிகுந்த வேதனையுடன் காணப்பட்டார். இதையடுத்து ஒரு ஸ்ட்ரெச்சர் கொண்டு வரப்பட்டு பிசியோக்களின் உதவியுடன் கே.எல்.ராகுல் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக க்ருனால் பாண்டியா
கே.எல்.ராகுல் இல்லாத நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துணை கேப்டனாக இருந்த க்ருனால் பாண்டியா கேப்டனாக விளையாடி வருகிறார். ஐபிஎல் 2023 புள்ளிப் பட்டியலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 8 ஆட்டங்களில் 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தினால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச அணி ஸ்கோரை (257/5) பதிவு செய்து பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 56 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற பிறகு இந்த போட்டியில் விளையாடுவதால் வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது.