WIvsSA முதல் டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டுடன் சாதனை படைத்த கிரேக் பிராத்வைட்
வெஸ்ட் இண்டீசின் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர் கிரேக் பிராத்வைட் 131 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 26.72 ஆகும். இதன் மூலம், 2001 முதல் டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்சம் 5,000 ரன்கள் எடுத்த வீரர்களில் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்ட பேட்டர்களின் பட்டியலில் கிரேக் பிராத்வைட் முதலிடத்தை பிடித்துள்ளார். 2011இல் அறிமுகமான பிராத்வைட், குறைந்தபட்சம் 5,000க்கும் அதிகமான ரன்களைக் குவித்த பேட்டர்களில் டெஸ்டில் 40.66 என்ற குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டுள்ளார். அவர் 93 போட்டிகளில் 5,714 ரன்கள் எடுத்துள்ளார்.
டாப் 4 வீரர்களில் இரண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்
இந்த பட்டியலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அசார் அலி 41.93 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 2010-2022 காலத்தில் 97 போட்டிகளில் விளையாடி அவர் 7,142 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக, இந்தியாவின் சுவர் என வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட் 43.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஜனவரி 2001 முதல் 2012இல் ஓய்வு பெறும் வரை, ராகுல் டிராவிட் 9,966 ரன்கள் குவித்தார். பட்டியலில் நான்காவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிவ்நாராயண் சந்தர்பால் 44.21 ஸ்ட்ரைக் ரேட்டுடன் உள்ளார். அவர் ஜனவரி 2001 முதல் 2015இல் ஓய்வு பெறும் வரை 9,185 ரன்கள் குவித்தார்.