
2028 ஒலிம்பிக் கிரிக்கெட்: ஆறு அணிகள், 90 வீரர்கள் பங்கேற்பு
செய்தி முன்னோட்டம்
128 ஆண்டுகளுக்குப் பிறகு, கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக் அரங்கிற்கு மீண்டும் வரவேற்கப்பட உள்ளது.
2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில், கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக T20 வடிவத்தில் சேர்க்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் மொத்தம் 90 வீரர்கள் பங்கேற்பார்கள் என ஐ.ஓ.சி. அறிவித்துள்ளது.
இதுவரை கிரிக்கெட் ஒருமுறை மட்டுமே — 1900-ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் — இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
விவரங்கள்
மேலும் சில புதிய விளையாட்டுகள் அறிமுகம்
கிரிக்கெட்டுடன் சேர்ந்து, ஸ்குவாஷ், ஃபிளாக் கால்பந்து, பேஸ்பால்/சாப்ட்பால் மற்றும் லாக்ரோஸ் ஆகியவையும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் புதிய விளையாட்டுகளாக இணைக்கப்பட்டுள்ளன.
2028 ஒலிம்பிக்கில் மொத்தமாக 351 பதக்கப் போட்டிகள் இடம்பெறவுள்ளன - இது பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் உள்ள 329 போட்டிகளைவிட அதிகம். 10,500 தடகள ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விளையாட்டுகளுக்காக மேலும் 698 வீரர்கள் இடம் பெறுவர்.
கிரிக்கெட்டின் எழுச்சி
உலக அரங்கில் கிரிக்கெட்டின் எழுச்சி
2022 காமன்வெல்த் விளையாட்டுகளில், பெண்கள் T20 கிரிக்கெட் முதல் முறையாக இடம்பெற்றது.
அப்போது ஆஸ்திரேலியா தங்கம், இந்தியா வெள்ளி பதக்கங்களை வென்றன.
அதனைத் தொடர்ந்து 2023 ஹாங்சோ ஆசிய விளையாட்டுகளிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் இடம்பெற்று, இந்தியா இரண்டிலும் தங்கம் வென்றது.
ICC மற்றும் LA28 ஒலிம்பிக் குழு இணைந்து கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க முன்னெடுத்தனர். அக்டோபர் 2023-இல் கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக ஐஓசிக்கு பரிந்துரைக்கப்பட்டது.
தற்போதைய ICC தலைவர் மற்றும் முன்னாள் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் இணைக்கும் பிரச்சாரத்தில் முக்கிய பங்காற்றினார்.
இது 2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் வரை நீடிக்கும் ஒரு நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்.