கைலியன் எம்பாபேவுக்காக 300 மில்லியன் யூரோ ஆஃபர் கொடுத்த சவூதி புரோ லீக் கிளப்
தற்சமயம் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் கைலியன் எம்பாபே, கிளப் போட்டியில் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார். 2024க்கு பிறகு பிஎஸ்ஜி அணியில் தனது ஒப்பந்தத்தை நீட்டிக்க எம்பாபே மறுத்துவிட்டதால், 2024இல் அவரை இலவசமாக வெளியே விடுவதற்கு பதிலாக, இந்த ஆண்டே அதிக தொகைக்கு கைமாற்றி விட முடிவு செய்துள்ளது. இதனால் அவரை எப்படியும் வாங்கிவிட பல அணிகள் போட்டியிடுகின்றன. அந்த வகையில், சவூதி புரோ லீக் போட்டியில் விளையாட, வரலாற்றில் இல்லாத வகையில் 300 மில்லியன் யூரோக்கள் கொடுக்க தயாராக உள்ளதாக தகவல் கசிந்துள்ளன.
எம்பாபேவை கைப்பற்ற ரியல் மாட்ரிட் அணியும் முயற்சி
ஏற்கனவே இந்த கோடையில், சவூதி புரோ லீக் கிளப்பான அல்-ஹிலால், பிஎஸ்ஜியில் இருந்து எம்பாபேவை ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிஎஸ்ஜி கேட்கும் தொகையை தரவும் அல்-ஹிலால் அணி தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர, ரியல் மாட்ரிட் அணியும் நீண்ட காலமாக அவரை கைப்பற்ற ஆர்வமாக உள்ளது. மேலும் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே இதுகுறித்து ஒருவித ஒப்பந்தம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, சில நாட்களுக்கு முன்பு, பிஎஸ்ஜி ஜப்பான் மற்றும் தென் கொரியா சுற்றுப்பயணத்திற்கான அணியில் கைலியன் எம்பாப்பேவை தங்கள் அணியில் இருந்து வெளியேற்ற முடிவு செய்தது. இதனால் அவர் விரைவில் பிஎஸ்ஜி அணியிலிருந்து வெளியேறுவது உறுதி என்பது தெளிவாகியுள்ளது.