ஆசிய கோப்பையில் கேஎல் ராகுலின் தேர்வு முறையல்ல; 'சீக்கா' கடும் விமர்சனம்
ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ அறிவித்தது. இந்திய கிரிக்கெட் அணியில் 17 பேர் இடம் பெற்றுள்ள நிலையில், காயத்தில் இருந்து திரும்பிய நான்கு வீரர்களையும் பிசிசிஐ தேர்வுக் குழு சேர்த்துள்ளது. இதில் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே அயர்லாந்து டி20 தொடரில் விளையாடி தங்கள் உடற்தகுதியை வெளிப்படுத்தியிருந்தாலும், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் மீதுதான் அனைவரது பார்வையும் இருக்கும். ஷ்ரேயாஸ் ஐயர் முழு உடற்தகுதியுடன் போட்டிக்குத் தயாராக இருந்தாலும், அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் கேஎல் ராகுல் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
கேஎல் ராகுலின் தேர்வை கடுமையா விமர்சித்துள்ள கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் கேஎல் ராகுல் பங்கேற்பது குறித்து நிச்சயமற்ற நிலையில் இருக்கும் போது, அவரை தேர்வு செய்துள்ளது முறையல்ல என்று இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்வாளர் சீக்கா என அழைக்கப்படும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். ராகுலின் தேர்வு குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய சீக்கா, "கேஎல் ராகுலுக்கு நிகில் பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. பிரச்சினை இருந்தால், அவரை அணியில் சேர்க்காதீர்கள். தேர்வின் போது ஒரு வீரர் உடற்தகுதியுடன் இல்லை என்றால், அவரை தேர்வு செய்யக் கூடாது. அதுதான் எங்களின் கொள்கை." எனக் கூறினார். ஆனால், இப்படி முழு உடற்தகுதியுடன் இல்லாத நிலையில், இந்த தேர்வு அவர்களின் குழப்பமான நிலையை காட்டுவதாக உள்ளதாக கூறியுள்ளார்.