Page Loader
மனைவிக்கு மாதம் ரூ.1.3 லட்சம் ஜீவனாம்சம்! கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு நீதிமன்றம் உத்தரவு!
மனைவிக்கு ஜீவனாம்சம் தர கிரிக்கெட்டர் முகமது ஷமிக்கு உத்தரவு

மனைவிக்கு மாதம் ரூ.1.3 லட்சம் ஜீவனாம்சம்! கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு நீதிமன்றம் உத்தரவு!

எழுதியவர் Sekar Chinnappan
Jan 25, 2023
12:33 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக அவரது மனைவி ஜகான் 2018 ஆம் ஆண்டில், மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கோரி வழக்கு தொடர்ந்தார். மேற்குவங்கத்தின் ஜாதவ்பூர் காவல் நிலையத்தில் ஷமிக்கு எதிராக வீட்டு துஷ்பிரயோகம் மற்றும் கொலை முயற்சி ஆகிய ஜாமீனில் வெளிவர முடியாத குற்றச்சாட்டுகளின் கீழ் ஜகான் புகார் தெரிவித்ததை அடுத்து, கொல்கத்தா உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், ஷமி ஜகானுக்கு ரூ.1.3 லட்சத்தை வழங்க வேண்டும் என நேற்று (ஜனவரி 24) உத்தரவிட்டது. இந்த ஜீவனாம்ச தொகையில் ரூ. 80,000 அவர்களின் மகளின் பராமரிப்பு செலவுக்கும், மீதமுள்ள ரூ.50,000 ஜஹானின் தனிப்பட்ட செலவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீடு

ஜகான் தரப்பு மேல்முறையீடு செய்ய முடிவு

ஜகான் தரப்பில் மாத ஜீவனாம்சமாக ரூ.10 லட்சம் கேட்கப்பட்டிருந்தது. அதில் 70% தனிப்பட்ட ஜீவனாம்சமாகவும், மீதி அவருடன் தங்கியிருக்கும் மகளின் பராமரிப்புக்காகவும் ஒதுக்கும்படி மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், கீழ் நீதிமன்றம் ரூ.1.3 லட்சம் மட்டுமே ஜீவனாம்சம் தர உத்தரவிட்டதால் அதிருப்தியடைந்துள்ள ஜகான் தரப்பு, மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. ஷமியின் 2020-21 ஆண்டு வருமானம் ரூ.7 கோடியாக உள்ள நிலையில், கீழ் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஏற்றுக்கொள்ள முடியாதது என ஜகானின் வழக்கறிஞர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, 2018இல் இருந்தே ஷமி தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து வருகிறார். அப்போது இது குறித்து வெளிப்படையாக ட்வீட் ஒன்றையும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.