மைதானத்தில் மோதிக்கொண்ட விராட் கோலி - கவுதம் கம்பீர்! பிசிசிஐ அதிரடி நடவடிக்கை!
செய்தி முன்னோட்டம்
லக்னோவில் நடந்த ஐபிஎல் 2023 தொடரின் 43வது போட்டிக்குப் பிறகு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீருக்கு போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதித்து பிசிசிஐ உத்தரவிட்டு உள்ளது.
ஐபிஎல் நடத்தை விதிகள் 2 ஆம் நிலை மீறலுக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக் அதே விதியின் லெவல் 1 மீறலுக்காக அவரது போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பேட்டிங்கின் போது, கோலி களத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார்.
மேலும் க்ருனால் பாண்டியாவின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து லக்னோ ஸ்டேடியத்தில் இருந்த கூட்டத்தை பார்த்து அமைதியாக இருக்கும்படி வாயில் விரல் வைத்து சைகை செய்தார்.
kohli vs gambhir clash
நீண்ட காலமாக நீடிக்கும் கோலி-கம்பீர் மோதல்
முன்னதாக பெங்களூர் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எல்எஸ்ஜி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு கம்பீரின் இதேபோன்ற செயலுக்கு, கோலியின் பதிலடியாக இது அமைந்தது.
இந்நிலையில் போட்டிக்கு பின்னர் வீரர்கள் கைகுலுக்கிக்கொண்டிருக்கும்போது, நவீன்-உல்-ஹக் கோலியுடன் ஆக்ரோஷமாக உரையாடுவதைக் காண முடிந்தது.
முன்னதாக இருவரும் களத்திலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அமித் மிஸ்ராவுடனும் கோலி களத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு வந்த கம்பீரும் கோலியிடம் ஆக்ரோஷம் காட்ட நிலைமை விபரீதமடைந்தது. அங்கிருந்த வீரர்கள் இருவரையும் விலக்கி விட்டு நிலைமையை சமாளித்தனர்.
2013 இல் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாகவும், கோலி ஆர்சிபி கேப்டனாகவும் இருந்தபோதும் இருவரும் அசிங்கமான வார்த்தை பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.