ஆசிய கோப்பை போட்டியில் கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு திரும்புவார் என தகவல்
ஐபிஎல் 2023 தொடரின்போது காயமடைந்த கே.எல்.ராகுல், இந்திய அணிக்கு ஆசிய கோப்பையின்போது திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்கள் வெவ்வேறு காயங்கள் காரணமாக சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை. இதில் ஐபிஎல் தொடரின்போது காயமடைந்த கே.எல். ராகுல் இங்கிலாந்தில் தொடை அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் ஓய்வில் இருந்து வந்த நிலையில், தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்காக இணைந்துள்ளார். இதனால் செப்டம்பரில் நடக்க உள்ள ஆசிய கோப்பைக்கு முன்னதாக அவர் இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் கே.எல்.ராகுலின் முக்கியத்துவம்
ஐசிசி போட்டிகளில் இந்தியா தொடர்ந்து மோசமான செயல்திறனை வெளிப்படுத்தி வரும் நிலையில், அணியின் நிரந்தர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இன்னும் காயத்திலிருந்து குணமடையவில்லை. ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக அவர் முழுமையாக குணமடைய வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒருநாள் உலகக்கோப்பையில் விக்கெட் கீப்பராக இஷான் கிஷான் போன்ற அனுபவமற்ற வீரர்களுக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த கே.எல்.ராகுலை பயன்படுத்த அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி ஒருநாள் உலகக்கோப்பை தொடங்க உள்ள நிலையில், அதன் முன்னோட்டமாக பார்க்கப்படும் ஆசிய கோப்பை செப்டம்பரில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.