
148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை; கே.எல்.ராகுல் புதிய சாதனை
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளார். ஒரே காலண்டர் ஆண்டில் சரியாக 100 ரன்களில் இரண்டு முறை ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் அகமதாபாத்தில் தனது 11வது டெஸ்ட் சதத்தை எட்டிய ராகுல், சதம் அடித்த உடனேயே ஆட்டமிழந்தார். கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற லார்ட்ஸ் டெஸ்டிலும் அவர் சரியாக 100 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார். 1877 இல் டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கப்பட்டதிலிருந்து, ஒரே ஆண்டில் இரண்டு முறை சரியாக 100 ரன்களில் ஆட்டமிழந்த வேறு எந்த வீரரும் இல்லை.
ஏழாவது வீரர்
ஒட்டுமொத்த டெஸ்ட் வரலாற்றில் ஏழாவது வீரர்
ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், தன் முழு கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டு முறை 100 ரன்களில் ஆட்டமிழந்த ஏழாவது வீரர் கே.எல்.ராகுல் ஆவார். அகமதாபாத்தில் 197 பந்துகளில் 100 ரன்கள் குவித்து, அவர் ஆடியது ஒரு பொறுமையான ஆட்டமாக அமைந்தது. இந்தியாவில் 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் அடித்த இரண்டாவது டெஸ்ட் சதம் இதுவாகும். ஆட்டத்திற்குப் பிறகு பேசிய ராகுல், இங்கிலாந்து போன்ற சவாலான சூழ்நிலைகளில் விளையாடிய அனுபவம் தனது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளதாகக் கூறினார். இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 532 ரன்கள் குவித்து அதிக ரன் எடுத்தவர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.