விராட் கோலியின் ஜெர்சி ரூ.40 லட்சத்திற்கு ஏலம்; அறக்கட்டளைக்கு நிதி திரட்டிய கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டி தம்பதி
இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல் மற்றும் அவரது மனைவி நடிகை அதியா ஷெட்டி ஆகியோர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கான விப்லா அறக்கட்டளையின் நோக்கத்தை ஆதரிக்கும் நோக்கில் 'கிரிக்கெட் ஃபார் சாரிட்டி' ஏலத்தை நடத்தினர். மும்பையில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) நடைபெற்ற ஏலத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் உள்ள சில பெரிய வீரர்கள் இந்த உன்னத நோக்கத்திற்காக தங்களுக்கு கிடைத்த பரிசுக்குரிய நினைவுப் பொருட்களை காட்சிக்கு வைக்க கொடுத்தனர். குறிப்பிடத்தக்க வகையில், இதில் ஏலத்திற்கு வைக்கப்பட்ட விராட் கோலியின் ஜெர்சி, 40 லட்ச ரூபாய்க்கு எடுக்கப்பட்டது. இது மைதானத்திற்கு அப்பால் கிரிக்கெட் ஏற்படுத்தக்கூடிய அபரிமிதமான நல்லெண்ணத்தையும் தாக்கத்தையும் எடுத்துக்காட்டுவதாக பலரும் தெரிவித்தனர்.
அமோக வரவேப்பைப் பெற்ற ஏலம்
இந்த ஏலத்திற்கு பலரும் அமோக வரவேற்பைக் கொடுத்த நிலையில், இதில் மொத்தம் ரூ.1.93 கோடி நிதி திரட்டப்பட்டது. விராட் கோலியின் பங்களிப்பு அவரது ஜெர்சியில் மட்டும் நின்றுவிடவில்லை. அவரது கையுறைகள் 28 லட்சத்துக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரோஹித் ஷர்மாவின் பேட் 24 லட்சத்துக்குச் சென்ற மற்றொரு நட்சத்திரப் பொருளாகும். இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் தோனியின் பேட் 13 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதே நேரம் ராகுல் டிராவிட்டின் பேட் மற்றும் கே.எல்.ராகுலின் ஜெர்சி தலா 11 லட்ச ரூபாய்களை ஈட்டியது. மாற்றுத்திறனாளி குழந்தைகளின் மேம்பாடு மற்றும் கல்விக்கு உதவுவதற்காக நடத்தப்பட்ட இந்த ஏலத்திற்கு கிடைத்த வரவேற்பால் ராகுல் மற்றும் அதியா இருவரும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.