ஜஸ்பிரித் பும்ராவை செதுக்கிய சிற்பி: அகமதாபாத் பயிற்சியாளர் கிஷோர் திரிவேதியின் நெகிழ்ச்சிப் பயணம்
செய்தி முன்னோட்டம்
நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரையிறுதியில், இங்கிலாந்து அணி 253 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தியபோது, இந்தியாவைத் தோல்வியிலிருந்து மீட்டவர் ஜஸ்ப்ரீத் பும்ரா. இந்தத் தருணத்தில், பும்ராவிற்குள் இருந்த அபார திறமையை அவர் 16 வயதாக இருந்தபோதே கண்டறிந்த அவரது பயிற்சியாளர் கிஷோர் திரிவேதி குறித்த தகவல் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது. அகமதாபாத்தில் உள்ள ராயல் கிரிக்கெட் அகாடமியில் தான் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா உருவானார்.
துணிச்சல்
வினோத ஆக்சனை மாற்ற மறுத்த துணிச்சல்
பும்ராவின் பந்துவீச்சு முறை ஆரம்பத்திலிருந்தே மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு இருந்தது. மற்ற பயிற்சியாளர்கள் அதைச் சரிசெய்ய முயன்றபோது, கிஷோர் திரிவேதி மட்டும் அந்த ஆக்சனை மாற்ற வேண்டாம் என முடிவு செய்தார். பும்ராவின் கைகள் நீளும் விதம், பந்தை பேட்டருக்கு மிக அருகில் விடுவிக்க உதவுகிறது என்பதை அவர் கண்டறிந்தார். "மற்றவர்கள் சொல்வதைக் கேட்காதே, உன் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது" என்று கூறி பும்ராவிற்கு தன்னம்பிக்கை ஊட்டினார்.
மாற்றம்
குறும்புக்கார சிறுவன் முதல் உலக நாயகன் வரை
பள்ளி பருவத்தில் பும்ரா ஒரு குறும்புக்கார மாணவனாகவே இருந்துள்ளார். பயிற்சியைத் தவிர்த்துவிட்டு நண்பர்களுடன் சுற்றச் சென்ற பும்ராவை, கிஷோர் திரிவேதி கண்டிப்புடன் கையாண்டுள்ளார். பும்ராவின் தாயாரிடம், "இவனை மூன்று ஆண்டுகள் என்னிடம் ஒப்படையுங்கள், உலகமே வியக்கும் வீரனாக மாற்றுகிறேன்" என்று வாக்குறுதி அளித்து, அதன்படியே அவரை செதுக்கினார். யார்க்கர், கட்டர் என பும்ராவின் ஒவ்வொரு ஆயுதத்திற்கும் பின்னால் திரிவேதியின் கடும் உழைப்பு உள்ளது.
அர்ப்பணிப்பு
79 வயதிலும் தொடரும் அர்ப்பணிப்பு
இன்று 79 வயதாகும் கிஷோர் திரிவேதி, இன்றும் தனது அகாடமிக்குத் தவறாமல் சென்று இளம் வீரர்களை உருவாக்கி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ஹாரி புரூக்கின் விக்கெட்டை பும்ரா வீழ்த்திய விதமும், ஜேக்கப் பெத்தேலின் அதிரடியைக் கட்டுப்படுத்தியதும் தனது மாணவனின் முதிர்ச்சியைக் காட்டுவதாக அவர் பெருமிதம் கொள்கிறார். "இவ்வளவு சிறிய மைதானத்திலிருந்து உலகின் சிறந்த பந்துவீச்சாளர் உருவானது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.