கேலோ இந்தியா தஸ் கா டம் போட்டியை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கலந்துகொண்டு கேலோ இந்தியா தஸ் கா டம் போட்டியின் தொடங்கி வைத்தார். சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மார்ச் 10 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை கேலோ இந்தியா தஸ் கா டம் போட்டியை ஏற்பாடு செய்கிறது. நாட்டின் 10 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் சுமார் 15,000 பெண் வீராங்கனைகள் கலந்துகொள்வார்கள். இதில் 10 விளையாட்டுகள் இடம் பெறுகிறது. தேசிய அல்லது மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியாத பெண் வீராங்கனைகளுக்கு களம் அமைத்துக் கொடுப்பதே இந்தப் போட்டியின் நோக்கமாகும்.
கேலோ இந்தியா திட்டம்
கேலோ இந்தியா என்பது, இந்தியாவில் விளையாட்டு குறித்த மனநிலையை மாற்ற மற்றும் விளையாட்டை ஒரு தொழிலாக மேற்கொள்வதை தடுக்கும் அல்லது ஊக்கமளிக்கும் சமூக தடைகளை அகற்றுவதற்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முதன்மையான திட்டமாகும். இதன் மூலன் நமது நாட்டில் நடைமுறையில் உள்ள அனைத்து விளையாட்டுகளுக்கும் வலுவான கட்டமைப்பை உருவாக்கி, இந்தியாவை ஒரு சிறந்த விளையாட்டு நாடாக நிலைநிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டு கேலோ இந்தியா இயங்கி வருகிறது. 2023-24 நிதியாண்டிற்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீடான Rs. 3397.32 கோடியில், கேலோ இந்தியாவுக்கு மட்டும் Rs.1000 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட Rs.400 கோடி அதிகமாகும்.