குழப்பங்களுக்கிடையே இந்திய தடகள வீராங்கணை ஜோதி யாராஜிக்கு அளிக்கப்பட்ட வெள்ளிப் பதக்கம், என்ன நடந்தது?
சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தடகளத்தில் நேற்று 100மீ தடை தாண்டும் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இந்தப் போட்டியின் முடிவில் மூன்றாவதாகவே எல்லையைக் கடந்திருந்தார் இந்திய வீராங்கணை ஜோதி யாராஜி. ஜோதியுடன் போட்டியிட்ட சக வீராங்கணை வூ யாணி இரண்டாவதாக எல்லையைக் கடந்து போட்டியை முடித்திருந்தார். ஆனால், இருவருமே ஓட்டத்தைத் தொடங்குவதற்கான துப்பாக்கி ஒலிப்பதற்கு முன்பே போட்டியைத் துவக்கியதாகக் கூறப்பட்டு, முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இருவருமே துப்பாக்கி ஒலிப்பதற்கு முன்பே போட்டியைத் துவக்கியிருந்தாலும், வூ யாணி ஓடத் துவக்கிய பிறகு தன்னிச்சையாகவே தானும் ஓடத் துவங்கியிருக்கிறார் ஜோதி யாராஜி.
ஜோதி யாராஜிக்கு அளிக்கப்பட்ட வெள்ளிப் பதக்கம்:
மேலும், தவறான தொடக்கத்தோடு தொடங்கியிரு்ந்தாலும், தொடக்கத்தில் சற்று மெதுவாகவே ஓடத் தொடங்கியிருக்கிறார் அவர். பின்னர் அதனை ஈடு செய்ய போட்டியின் இடைப்பட்ட பகுதியில் தன்னுடைய முழுத் திறனையும் பயன்படுத்தி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். இறுதியில் 12.91 நொடிகளில் போட்டியை நிறைவு செய்திருக்கிறார் அவர். பல கட்ட சோதனைகளுக்கு பிறகு, முதலில் தவறான தொடக்கத்தைத் தொடங்கிய சீனா வீராங்களை வூ யாணி போட்டியிலிருந்து நீக்கப்பட்டு, மூன்றாவதாக போட்டியை நிறைவு செய்த ஜோதி யாராஜிக்கு வெள்ளிப் பதக்கம் அளிக்கப்பட்டது. இந்த வெள்ளிப் பதக்கத்தையும் சேர்த்து இதுவரை நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகள போட்டிகளில் 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா.