'நான் ரெடி' : முழு உடற்தகுதியுடன் இன்ஸ்டாகிராமில் காணொளி வெளியிட்ட ஜஸ்ப்ரீத் பும்ரா
இந்திய கிரிக்கெட் அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா பல மாதங்களாக காயம் காரணமாக இடம் பெறாதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் அவருக்கு முதுகுவலி ஏற்பட்டது மற்றும் அக்டோபர் - நவம்பரில் டி20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பு, ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் 2022 ஆசிய கோப்பையையும் தவறவிட்டார். எனினும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அணியில் மீண்டும் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அதிலிருந்து விலகினார். இந்நிலையில், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில், தான் பயிற்சியில் ஈடுபடும் ஒரு காணொளி கிளிப்பை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அயர்லாந்து தொடரில் வாய்ப்பை எதிர்நோக்கும் ஜஸ்ப்ரீத் பும்ரா
காணொளி வெளியிட்டு தான் பூரண உடற்தகுதியுடன் இருப்பதை வெளிப்படுத்தியுள்ள பும்ரா, அயர்லாந்து தொடரில் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளார். அந்த காணொளியில் தான் பந்துவீசுவதன் பின்னணியில், "நான் வீட்டிற்கு வருகிறேன்" என்ற பாடலையும் இசைக்க விட்டுள்ளார். இதற்கிடையே, இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் வெஸ்ட் இண்டீஸ் சென்று ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பைக்கான திட்டம் குறித்து விவாதிக்கும், பும்ராவின் உடற்தகுதி குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 29 வயதான பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புவது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சில் கூடுதல் பலம் சேர்க்கும்.