இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 47 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜஸ்ப்ரீத் பும்ரா
செய்தி முன்னோட்டம்
பார்டர் கவாஸ்கர் டிராபியின் கடைசி டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தும் ஜஸ்ப்ரீத் பும்ரா, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸின் போது 47 ஆண்டுகால சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார்.
1977/78 முதல் பிஷன் சிங் பேடி வெளிநாட்டில் இருதரப்பு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை தக்கவைத்திருந்த நிலையில், அதை தற்போது பும்ரா முறியடித்துள்ளார்.
முன்னதாக, பிஷன் சிங் பேடி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்த ஆண்டு நடந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையை வைத்திருந்தார்.
இந்நிலையில், சிட்னி டெஸ்டில் முதல் இன்னிங்ஸ் முடிவில் 32 விக்கெட்டுகளுடன் பும்ரா அதை முறியடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டி நிலவரம்
சிட்னி டெஸ்ட் போட்டி நிலவரம்
சிட்னியில் நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு சுருண்ட நிலையில், ஆஸ்திரேலியா 181 ரன்களுக்கு சுருண்டது.
முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரீத் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய இந்தியா இரண்டாம் நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.
இதற்கிடையே, ஜஸ்ப்ரீத் பும்ரா காயம் காரணமாக போட்டியிலிருந்து பாதியில் வெளியேறியுள்ளார்.
அவரது காயத்தின் தன்மை மற்றும் தீவிரம் குறித்து மருத்துவர்கள் குழு ஆராய்ந்து வருகிறது.