'இவ்ளோ கோபம் கூடாது' : ஐபிஎல் நடத்தை விதிகளை மீறிய ஜேசன் ராய்க்கு 10 சதவீதம் அபராதம் விதிப்பு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் புதன்கிழமை (ஏப்ரல் 26) இரவு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது நடத்தை விதிகளை மீறியதற்காக போட்டிக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. ஜேசன் ராய் ஆட்டமிழந்த பிறகு கோபத்துடன் பெயில் ஒன்றை அடித்ததற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது ஐபிஎல் நடத்தை விதிகளில் நிலை 1 மீறல் என்பதால் போட்டி நடுவரின் முடிவே இறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஐபிஎல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடத்தை விதியின் நிலை 1 மீறல்களுக்கு, போட்டி நடுவரின் முடிவே இறுதியானது மற்றும் பிணைப்புக்குரியது" என்று அது மேலும் கூறியது.
ஆர்சிபி vs கேகேஆர் போட்டி ஹைலைட்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. இதில் ஜேசன் ராய் 29 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். 201 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலிஅரைசதமடித்தாலும், 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் ஆர்சிபி தோல்வியைத் தழுவியது. கேகேஆர் இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.