இரண்டாவது இன்னிங்சில் அதிக விக்கெட்டுகள் : முரளிதரன் சாதனையை முறியடித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!
நியூசிலாந்தில் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் விளையாடி வரும் நிலையில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸ்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் எனும் சிறப்பை கொண்டுள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளராக அவர் இருக்கிறார். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில், டெஸ்ட் கிரிக்கெட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் (டெஸ்ட்) 228 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்துக்கு அணிக்காக விளையாடி வரும் ஆண்டர்சன், தற்போது இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை முழு விபரம்
ஆண்டர்சன் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 98 டெஸ்ட் போட்டிகளில் 26.14 சராசரியுடன் 231 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். முரளிதரன் 62 டெஸ்ட் போட்டிகளில் 228 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் 200 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த இரு பந்துவீச்சாளர்கள் முரளிதரன் மற்றும் ஆண்டர்சன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே 193விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஒரு டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையை ஆண்டர்சன் (15) கொண்டுள்ளார். இதில் முத்தையா முரளிதரன் 21 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.