அணியின் ஒரே சுழற்பந்து வீச்சாளர் விலகல்! ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு!
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவாக, ஜூன் 16 ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்கும் ஆஷஸ் தொடரில் இருந்து ஜாக் லீச் நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் முடிவடைந்த அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது இங்கிலாந்து இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச்சிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. ஜாக் லீச் கடந்த சில காலமாக டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சுக்கு முதன்மையான தேர்வாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதிலாக மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. முன்னதாக அயர்லாந்துக்கு எதிரான இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஜாக் லீச் மொத்தம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி, இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் களமிறங்கும் இங்கிலாந்து
தற்போது ஜாக் லீச் விலகியுள்ள நிலையில், ஆஷஸ் 2023 தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் வேறு எந்த சிறப்பு சுழற்பந்து வீச்சாளரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2018 இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான லீச் இதுவரை மொத்தம் 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 124 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். குறிப்பாக 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, சிறப்பான ஃபார்மில் இருந்து வரும் லீச், 2022 முதல் 17 டெஸ்ட் போட்டிகளில் 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் (71) மட்டுமே லீச்சை விட அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.