Loading...
51 வயதில் 5 விக்கெட்டுகள்! ஆஸ்திரேலிய ஜாம்பவானின் 96 ஆண்டுகால சாதனையைத் தகர்த்த ஐல் ஆஃப் மேன் வீராங்கனை
ஆஸ்திரேலிய ஜாம்பவானின் 96 ஆண்டுகால சாதனையைத் தகர்த்த ஐல் ஆஃப் மேன் வீராங்கனை

51 வயதில் 5 விக்கெட்டுகள்! ஆஸ்திரேலிய ஜாம்பவானின் 96 ஆண்டுகால சாதனையைத் தகர்த்த ஐல் ஆஃப் மேன் வீராங்கனை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 29, 2026
02:39 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஆண், பெண் இரு பாலரிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மிக மூத்த பந்துவீச்சாளர் என்ற மகத்தான உலக சாதனையை ஐல் ஆஃப் மேன் அணியின் 51 வயது சுழற்பந்து வீச்சாளர் ஜோஅன் ஹிக்ஸ் படைத்துள்ளார். ருமேனியாவில் நடைபெற்ற கிரீஸ் அணிக்கு எதிரான மகளிருக்கான சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில், 51 ஆண்டுகள் 173 நாட்கள் வயதான அவர் வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் பெர்ட் அயர்ன்மாங்கர் 1932ல் 49 வயதில் படைத்த சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

சாதனை முறியடிப்பு

ஆஸ்திரேலிய ஜாம்பவான் பெர்ட் அயர்ன்மாங்கரின் சாதனை முறியடிப்பு

கடந்த 96 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த இந்த வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரரான ஆஸ்திரேலியாவின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் பெர்ட் அயர்ன்மாங்கர், 1932 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 49 ஆண்டுகள் 314 நாட்கள் வயதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

தற்போது ஜோஅன் ஹிக்ஸ் தனது 51 வயதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அவரைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

இப்போட்டியில் 15 ஓவர்களில் கிரீஸ் அணியை 52 ரன்களுக்குள் சுருட்டிய ஐல் ஆஃப் மேன் அணி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சர்வதேச அறிமுகம்

47 வயதில் சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமான வீராங்கனை

ஜோஅன் ஹிக்ஸின் இந்த வரலாற்று சாதனை அவரது அசாதாரணமான கிரிக்கெட் பயணத்திற்கு மேலும் ஒரு மகுடமாக அமைந்துள்ளது.

இவர் தனது 47 வயதில் தான் ஐல் ஆஃப் மேன் தேசிய அணிக்காக சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

இதற்கு முன்னதாக 2024 ஆம் ஆண்டில் மால்தா அணிக்கு எதிரான போட்டியில் 49 ஆண்டுகள் 168 நாட்கள் வயதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மிக மூத்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்திருந்தார்.

தற்போது ஆடவர் சாதனையும் சேர்த்து முறியடித்துள்ளார்.

ADVERTISEMENT

3வது ஐந்து விக்கெட்

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஜோஅன் ஹிக்ஸின் 3வது 5 விக்கெட் சாதனை

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஜோஅன் ஹிக்ஸ் கைப்பற்றும் 3வது 5 விக்கெட் சாதனை இதுவாகும்.

கிரீஸ் நாட்டின் பேட்டிங் வரிசையைத் தனது கூர்மையான சுழற்பந்து வீச்சால் தரைமட்டமாக்கிய ஹிக்ஸ், 10 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது வாழ்நாளின் மிகச்சிறந்த பந்துவீச்சுப் பதிவை எட்டினார்.

51 வயதிலும் குறையாத துடிப்புடனும் தணியாத ஆர்வத்துடனும் களமிறங்கி அவர் படைத்துள்ள இந்த உலக சாதனை, சர்வதேசக் கிரிக்கெட் உலகிலும் விளையாட்டு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வியப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

ADVERTISEMENT